

இன்றைய காலக்கட்டத்தில் 20 மற்றும் 30 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் பலரும் சந்திக்கும் மிக முக்கியமான அழகு சார்ந்த பிரச்சினை இளநரை . முன்பெல்லாம் 40 அல்லது 50 வயதுக்கு மேல் ஏற்பட்ட முடி நரைத்தல், தற்போது மாறிவரும் வாழ்க்கை முறையால் சிறுவயதிலேயே ஏற்படுகிறது. தலைமுடிக்குக் கருமை நிறத்தைத் தரும் 'மெலனின்' என்ற நிறமி குறைவதே இதற்கு அடிப்படைக் காரணமாகும்.
இளம் வயதில் தலைமுடி நரைப்பதற்கான முக்கியக் காரணங்கள் என்ன என்பதை இங்கே விரிவாகப் பார்க்கலாம்.
நமது உடலில் வைட்டமின் Vitamin B12, வைட்டமின் D, இரும்புச்சத்து , தாமிரம் மற்றும் துத்தநாகம் போன்ற சத்துக்கள் குறையும்போது முடி தனது இயற்கையான நிறத்தை இழக்கிறது. குறிப்பாகத் துரித உணவுகளை அதிகம் உண்பவர்களுக்கு இந்தச் சத்துக்கள் கிடைக்காமல் போவதால் இளநரை விரைவில் ஏற்படுகிறது.
வேலைப்பளு, தூக்கமின்மை மற்றும் தொடர்ச்சியான மன அழுத்தம் ஆகியவை உடலில் 'கார்டிசோல்' என்ற ஹார்மோனை அதிகரிக்கின்றன. இது முடியின் வேர்க்கால்களில் உள்ள நிறமி செல்களைப் பாதித்து, தலைமுடியை விரைவாக வெள்ளையாக மாற்றுகிறது.
உங்கள் பெற்றோர் அல்லது தாத்தா, பாட்டிக்குச் சிறுவயதிலேயே தலைமுடி நரைத்திருந்தால், மரபணு ரீதியாக உங்களுக்கும் இளநரை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம். இதனை முழுமையாகத் தடுக்க முடியாவிட்டாலும், சரியான பராமரிப்பு மூலம் தள்ளிப்போட முடியும்.
தற்போது சந்தையில் கிடைக்கும் வீரியம் மிக்க ஷாம்புகள், ஹேர் டை , ஹேர் ஜெல் மற்றும் அடிக்கடி 'Hair Straightening' போன்ற வெப்ப சிகிச்சைகளைச் செய்வதால் முடியின் இயற்கையான ஈரப்பதம் போய், மெலனின் உற்பத்தி பாதிக்கப்படுகிறது.
புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு ரத்த ஓட்டம் குறைந்து, முடியின் வேர்க்கால்களுக்குத் தேவையான ஆக்சிஜன் கிடைப்பதில்லை. ஆய்வுகளின்படி, புகைப்பிடிப்பவர்களுக்கு மற்றவர்களை விட இரண்டரை மடங்கு வேகமாக இளநரை ஏற்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
தினசரி உணவில் கறிவேப்பிலை, நெல்லிக்காய், கீரை வகைகள், பாதாம் மற்றும் புரதம் நிறைந்த உணவுகளைச் சேர்த்துக்கொள்வது அவசியம். வாரத்திற்கு இருமுறை தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் தேய்த்து மசாஜ் செய்வதும், ரசாயனம் இல்லாத இயற்கையான சீயக்காய் அல்லது மென்மையான ஷாம்புகளைப் பயன்படுத்துவதும் இளநரையைக் கட்டுப்படுத்த உதவும்.