

இன்றைய காலகட்டத்தில் மாறிவரும் வாழ்வியல் முறை, மன அழுத்தம் மற்றும் காற்றில் உள்ள மாசு காரணமாக பலரும் முடி உதிர்வு, வறண்ட கூந்தல் போன்ற பல்வேறு பிரச்சனைகளைச் சந்தித்து வருகின்றனர்.
இதற்காக விலையுயர்ந்த ரசாயன கண்டிஷனர்களை தேடிச் செல்வதைத் தவிர்த்து, நம் சமையலறையில் அன்றாடம் கிடைக்கும் அரிசி வடித்த கஞ்சியைக் கொண்டு கூந்தலை பளபளப்பாகவும் மிருதுவாகவும் மாற்ற முடியும் என்று அழகுக் கலை நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
வழக்கம்போல உங்கள் தலைமுடிக்கு ஷாம்பு போட்டு, சுத்தமான நீரைக் கொண்டு முடியை நன்றாக அலசிக் கொள்ள வேண்டும். சாதம் வடித்த கஞ்சி நன்றாகக் குளிர்ந்த பிறகு, அதனை எடுத்து உங்கள் தலைமுடியின் வேர்க்கால்கள் முதல் நுனி வரை படுமாறு மெதுவாக ஊற்ற வேண்டும்.
கஞ்சி நீரை ஊற்றிய பின், உங்களது விரல் நுனிகளால் தலையை 5 முதல் 10 நிமிடங்கள் மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். இறுதியாக, குளிர்ந்த அல்லது சாதாரண நீரைக் கொண்டு தலையை முழுமையாக அலசிவிட வேண்டும். (இதற்குப் பிறகு மீண்டும் ஷாம்பு போடக் கூடாது).
அரிசி வடித்த கஞ்சியில் அதிக அளவில் அமினோ அமிலங்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. இவை முடியின் வேர்க்கால்களை பலப்படுத்தி முடி உதிர்வைக் கட்டுப்படுத்துகின்றன.
இதில் உள்ள 'இனோசிடால்' என்ற கார்போஹைட்ரேட், சேதமடைந்த கூந்தலை உள்ளிருந்து சரிசெய்து, முடிக்கு ஒரு இயற்கையான கண்டிஷனராகச் செயல்படுகிறது.
ரசாயன கண்டிஷனர்கள் போலல்லாமல், இது கூந்தலின் இயற்கையான ஈரப்பதத்தைத் தக்கவைத்து, முடியை பட்டுப் போல் மிருதுவாகவும், பளபளப்பாகவும் மாற்றுகிறது.
வறண்ட கூந்தல் உள்ளவர்களுக்கு ஏற்படும் முக்கியப் பிரச்சனை முடி சிக்குவதாகும். கஞ்சி நீர் கொண்டு அலசுவதன் மூலம் கூந்தல் நேராகி, சிக் ஏற்படுவது பெருமளவு குறையும்.
சாதம் வடித்த உடனேயே சூடாக இருக்கும் கஞ்சியைத் தலையில் ஊற்றக் கூடாது. கஞ்சி நீர் முற்றிலும் குளிர்ந்த நிலைக்கு வந்த பிறகோ அல்லது முந்தைய நாள் வடித்த கஞ்சியை லேசாகப் புளிக்க வைத்தோ பயன்படுத்துவது கூடுதல் பலனைத் தரும்.