

நமது பாரம்பரிய உணவு முறைகளில் நெய்யிற்கு எப்போதும் தனி இடம் உண்டு. உணவின் சுவையை கூட்டுவது மட்டுமின்றி, உடல் ஆரோக்கியத்திற்கும் நெய் பெரிதும் உதவுகிறது. ஆனால், நெய் சாப்பிடுவதால் முக அழகு மேம்படுமா மற்றும் முகம் ஜொலிஜொலிப்பாக மாறுமா என்ற கேள்வி பலரிடமும் உள்ளது.
நெய்யில் ஆரோக்கியமான கொழுப்பு அமிலங்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. நாம் தினமும் உணவில் மிதமான அளவில் நெய்யைச் சேர்த்துக் கொள்ளும்போது, அது சருமத்தின் உட்பகுதியைச் சென்றடைந்து வறட்சியை நீக்குகிறது. இதனால் சருமம் இயற்கையாகவே ஈரப்பதத்துடன் பொலிவாகக் காட்சியளிக்கிறது.
நெய்யில் வைட்டமின் A, D மற்றும் E ஆகியவற்றுடன் சக்திவாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளன. இவை சருமத்தில் உள்ள செல்களைப் புதுப்பித்து, சுருக்கங்கள் மற்றும் கோடுகளைக் குறைக்க உதவுகின்றன.
தினமும் நெய் சாப்பிடுவது சருமத்தின் நெகிழ்வுத்தன்மையை அதிகரித்து, நீண்ட நாட்கள் இளமையான தோற்றத்தைத் தக்கவைக்க உதவுகிறது.
நெய் நமது செரிமான மண்டலத்தை சீராக்கி, குட ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. ஆயுர்வேதத்தின்படி, குடல் சுத்தமாக இருந்தாலே முகத்தில் உள்ள பருக்கள், கரும்புள்ளிகள் நீங்கி முகம் பளிச்சென்று மாறும். நெய் உடலின் நச்சுக்களை வெளியேற்றுவதால், ரத்தம் சுத்திகரிக்கப்பட்டு முகம் தங்கம் போல ஜொலிக்கத் தொடங்குகிறது.
நெய் சருமத்திற்கு நல்லது என்றாலும், அதனைச் சரியான அளவில் மட்டுமே உட்கொள்ள வேண்டும். தினமும் 1 முதல் 2 டீஸ்பூன் நெய் சாப்பிடுவது போதுமானது. அளவுக்கு அதிகமாக நெய் சாப்பிட்டால், அது உடலில் கொழுப்பை அதிகரித்து, சிலருக்கு முகப்பருக்களை உண்டாக்கக்கூடும்.
குறிப்பாக, எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் மற்றும் உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் நிபுணர்களின் ஆலோசனையின் பேரில் அளவாகச் சாப்பிடுவது அவசியமாகும்.