

‘மகாபிரபு, ஏய், சாணக்யா, சண்டமாருதம்’ போன்ற படங்களில் இணைந்து பணியாற்றிய சரத்குமார் – இயக்குனர் ஏ.வெங்கடேஷ், மீண்டும் ‘பாம்பன்’ என்ற படத்திற்காக கூட்டணி அமைத்துள்ளனர். இதில் சரத்குமார் வித்தியாசமான வேடத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டது.
இந்த போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி இருக்கிறது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்துள்ளது. இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கும் நிலையில், இந்த கூட்டணியில் வரலட்சுமி சரத்குமார் இணைந்திருக்கிறார்.
அப்பாவுடன் இணைந்து நடிப்பது மிகவும் உற்சாகமாவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது என்றும், படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள் என்றும் வரலட்சுமி சரத்குமார் கூறியிருக்கிறார்.
எஸ்.எஸ்.கே.புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் எஸ்.எஸ்.கே.சங்கரலிங்கம் ‘பாம்பன்’ படத்தை தயாரிக்கவுள்ளார். ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கவுள்ள இப்படத்திற்கு என்.எஸ்.உதயகுமார் ஒளிப்பதிவு செய்யவுள்ளார். விரைவில் இந்த படத்தில் நடிக்கவுள்ள மற்ற நடிகர்களின் பட்டியல் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.