

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் திரிஷா. இவர் திரையுலகிற்கு அறிமுகமாகி 18 வருடங்களுக்கு மேல் ஆகியும் ரசிகர்கள் மனதில் நிலையான இடத்தை பிடித்து இருக்கிறார். இவரது நடிப்பில் தற்போது ‘மோகினி’, ‘கர்ஜனை’, அரவிந்த் சாமியுடன் ‘சதுரங்க வேட்டை’, விஜய் சேதுபதியுடன் ‘96’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இதில் ‘மோகினி’, ‘கர்ஜனை’ படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இவ்விரு படங்களும் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்கள். தற்போது இந்த படங்களின் வரிசையில் மீண்டும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் திரிஷா நடிக்க இருக்கிறார்.
இந்த புதிய படத்திற்கு ‘குற்றப்பயிற்சி’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இதில் திரிஷா துப்பறிவாளராக நடிக்க இருக்கிறார். உண்மை சம்பவத்தை கொண்டு உருவாகும் இப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியாகி இருக்கிறது. இப்படம் இந்தியாவின் முதல் பெண் துப்பறிவாளர் படம் என்று கூறப்படுகிறது.
இந்த புதிய படத்தை ஸ்ரீ குரு ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் ஜி.விவேகானந்தன் தயாரிக்கிறார். இயக்குனர் பாலாவின் முன்னாள் உதவியாளர் வெர்னிக் இயக்குகிறார்.