

வேற்றுக் கிரகத்தில் சிக்கிக்கொள்ளும் தோர், எப்படி தன் சகோதரி ஹெலாவை வீழ்த்தி தன் உலகமான ஆஸ்கார்டை எப்படி மீட்டெடுக்கிறான் என்பதே தோர் : ரக்னராக் படத்தின் கதை.
மார்வெல்லின் சூப்பர் ஹீரோ பட வரிசையில், இப்படமும் அமைந்திருக்கிறது. மல்ட்டி ஹீரோக்களை வைத்து அவர்களுக்குள்ளே அவர்களை கலாய்த்து மிகவும் சுவாரஸ்யமாக படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் தைகா வைடிடி. ஹீரோக்களை வைத்து மிகவும் திறமையாக வேலை வாங்கி இருக்கிறார். பல பிரம்மாண்டமான காட்சிகள் கண்களுக்கும் விருந்தாகவும், ரசிக்கும் படியாகவும் அமைத்திருக்கிறார்.
தோராக நடித்திருக்கும் கிறிஸ் ஹெம்ஸ்வொர்த், லோகியாக நடித்திருக்கும் டாம் ஹிட்டில்டன், ஹல்க்காக நடித்திருக்கும் மார்க் ரஃபலோ ஆகியோர் நடிப்பில் ஒருத்தருக்கொருவர் குறைந்தவர் இல்லை என்று போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள். சகோதரியான ஹெலா கதாபாத்திரத்தில் வரும் கேட் பிளாங்கெட் வில்லத்தனத்தில் மிரட்டி இருக்கிறார்.
குட்டிக்குட்டியாக பல கதைகள் இருந்தாலும் படம் போரடிக்காமல் செல்கிறது. ஒவ்வொன்றிலும் ரசித்து சிரிக்க அத்தனை காட்சிகள், வசனங்கள். கொஞ்சம் கதை, நிறைய காமெடி வைத்திருக்கிறார்கள். குறிப்பாக கல் மனிதன் கார்க் அடிக்கும் ஒன் லைனர்கள் சிறப்பு.
ஜாவியரின் ஒளிப்பதிவு திரையை விட்டு கண்களை விலக மறுக்கிறது. அந்தளவிற்கு திறம்பட ஒளிப்பதிவு செய்திருக்கிறார். மார்க் மதர்ஸ்பாவின் பின்னணி இசை படத்தின் ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது.