

மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் செப்10 வெளியான ஆக்ஷன் திரைப்படமாகும். சூரி முதன்மையான கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
தமிழ்நாட்டின் கடலோர பகுதியில் நடக்கும் பரம்பரியமான பாய்மரப் படகு போட்டியை மையமாக கொண்டு திரைப்படத்தின் கதைக்களம் அமைந்துள்ளது.
கடலோடு பிறந்து, அலையோடு வளர்ந்து, புயலோடு போரிட்டு வாழும் நம் நெய்தல் நிலத்து மக்களின் வாழ்வியலையும், வீரத்தையும், மரபையும் திரைமொழியில் உயிர்ப்பித்திருக்கும் ‘மண்டாடி’ திரைப்படத்தைத் தமிழ் மக்கள் பேரன்போடு வரவேற்று கொண்டாடி வருவது அளப்பரிய மகிழ்ச்சியளிக்கிறது என்று நாதக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பாராட்டியுள்ளார்
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-
கடல்சார் வாழ்வியலான பாய்மர படகு போட்டியை பெருந்திரையில் பெருமையோடு பதிவு செய்திருக்கும் மண்டாடி, தமிழ்த் திரையுலகில் பாராட்டப்பட வேண்டிய முக்கியமான படைப்பாக அமைந்திருக்கிறது.
கதைநாயகனாக நடித்திருக்கும் என் அன்புத்தம்பி சூரி, தனது ஒவ்வொரு படைப்பின் மூலமும் தன்னைத் தானே செதுக்கிக்கொண்டு கலைப்பயணத்தில் அடுத்தடுத்த உயரங்களை எட்டி வருகிறார்.
‘மண்டாடி’ திரைப்படத்திற்காக அவர் செலுத்தியிருக்கும் கடின உழைப்பை, அர்ப்பணிப்பையும் மக்கள் தங்கள் பேரன்பால் அங்கீகரித்துக் கொண்டாடுவது தம்பி சூரியின் கலைப்பயணத்திற்குக் கிடைத்த மகத்தான வெகுமதி.
கடல் அலையின் பேரிரைச்சலையும், போட்டியின் பரபரப்பையும், மண்ணின் மணத்தையும், மனிதர்களின் உணர்ச்சியையும் தனது இசையின் வழியே பார்வையாளர்களின் இதயத்திற்குக் கடத்தி, 'மண்டாடி'யின் உணர்வுக்கும் வேகத்திற்கும் தனது இசையால் உயிரூட்டியுள்ள என் அன்புத்தம்பி இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ் குமார் அவர்களுக்கும் எனது அன்பும் பாராட்டுகளும்!
கரையிலிருந்து கடலைப் படம் பிடிப்பதோடு நின்றுவிடாமல், கடலுக்குள் சென்று அலைகளோடும் படகுகளோடும் பயணித்து அதன் பேரழகையும் பேராற்றலையும் திரையில் உயிரோவியமாகப் பதிவு செய்துள்ள ஒளிப்பதிவாளர் எஸ்.ஆர்.கதிர் அவர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகள்.
ஒரு படைப்பின் கனவை நம்பி, அதற்குத் தேவையான பெரும் பொருட்செலவையும் தயங்காது ஏற்று, மிகப்பெரிய படைப்பாக ‘மண்டாடி’யைத் தயாரித்த தயாரிப்பாளர் எல்ரெட் குமார் அவர்களின் துணிவும் கலை மீதான நம்பிக்கையும் மிகுந்த பாராட்டுக்குரியது.
உலகத்தின் கதைகளைத் தமிழில் சொல்வதைக் காட்டிலும், தமிழரின் கதையை உலகம் பேசுமாறு செய்வதே தமிழ்த் திரையுலகின் பெருவெற்றியாகும். அத்தகைய படைப்புகளைத் தமிழ் மக்கள் ஒருபோதும் கைவிடமாட்டார்கள்; தங்கள் பேரன்பால் தோளில் தூக்கிச் சுமப்பார்கள் என்பதற்கு ‘மண்டாடி’ திரைப்படத்திற்குக் கிடைத்திருக்கும் மக்களின் கொண்டாட்டமே சான்றாகும்
மண்டாடி’ திரைப்படத்திற்காகத் தங்களை முழுமையாக அர்ப்பணித்து உழைத்த தம்பி சூரி, அண்ணன் சத்யராஜ், சுஹாஸ், தம்பி பாலா சரவணன், நாயகி மஹிமா, இயக்குனர் மதிமாறன் புகழேந்தி, இசையமைத்த ஜீ.வி.பிரகாஷ் குமார், ஒளிப்பதிவாளர் எஸ்.ஆர்.கதிர் , தயாரிப்பாளர் எல்ரெட் குமார் உள்ளிட்ட நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் ஒட்டுமொத்தப் படக்குழுவினருக்கும் எனது உளமார்ந்த பாராட்டுகளையும் அன்பு நிறைந்த வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.