வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நிவின் பாலி

சில நாட்களாக தன்னைப் பற்றி வந்த செய்தி, வதந்தி என்று கூறி அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் நடிகர் நிவின் பாலி.
வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நிவின் பாலி
Published on

மலையாள முன்னணி நடிகர்களில் ஒருவரான நிவின் பாலி, தமிழில் ‘நேரம்’ படம் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. அதன்பிறகு மலையாளத்தில் வெளியான ‘பிரேமம்’ படத்துக்கும் தமிழ் ரசிகர்கள் ஏகோபித்த ஆதரவு தந்தனர். சென்னையிலேயே அந்தப் படம் 225 நாட்கள் ஓடியது.

சமீபத்தில் இவரது நடிப்பில் ‘ரிச்சி’ என்ற படம் வெளியானது. கெளதம் ராமச்சந்திரன் இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். கன்னடத்தில் சூப்பர் ஹிட்டான ‘உளிடவரு கண்டந்தே’ படத்தின் தமிழ் ரீமேக்காக வெளியானது. 

இந்நிலையில், அஜித் நடிக்கும் ‘விஸ்வாசம்’ படத்தில், முக்கிய வேடத்தில் நிவின் பாலி நடிப்பதாக செய்திகள் வெளியானது. ‘வீரம்’, ‘வேதாளம்’ மற்றும் ‘விவேகம்’ படங்களைத் தொடர்ந்து அஜித் – சிவா கூட்டணியில் உருவாகும் நான்காவது படம் இது. ‘விவேகம்’ படத்தைத் தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்தப் படத்தில் அஜித்துக்கு வில்லனாக நிவின் பாலி நடிக்க இருப்பதாக, கடந்த சில நாட்களாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

ஆனால், இந்தத் தகவலை நிவின் பாலி மறுத்துள்ளார். “எனக்கு அப்படி எந்தவொரு அழைப்பும் வரவில்லை. வந்த செய்திகள் வதந்தி என்றும், மீடியா மூலமாகவே இந்த செய்தியைத் தெரிந்து கொண்டேன் என்றும்” என நிவின் பாலி தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com