

நயன்தாரா தற்போது `அறம்', `கொலையுதிர் காலம்', `இமைக்கா நொடிகள்', உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார். மேலும் சிவகார்த்திகேயன் ஜோடியாக `வேலைக்காரன்' படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்த படம் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு வருகிற செப்டம்பர் 29-ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.
இந்நிலையில், அறிமுக இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க நயன்தாரா ஒப்பந்தமாகி இருக்கிறார். காமெடி படமாக உருவாக இருக்கும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் யோகி பாபு நடிக்கிறார். இந்த படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் ராஜு மகாலிங்கம் தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார்.
இந்த படம் குறித்த அறிவிப்பு அடங்கிய வீடியோவை நடிகர் சிவகார்த்திகேயன் இன்று வெளியிட்டார். அதில் படத்தின் பெயர் உள்ளிட்ட தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விபரங்கள் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது. இந்த படத்திற்கு `கோகோ' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. அதாவது `கோலமாவு கோகிலா' என்பதை சுருக்கி `கோகோ' என்று வைத்துள்ளனர்.