They Call Him OG
They Call Him OG(2.5 / 5)
கதைக்களம்:
நாயகன் பவன் கல்யாண் தற்காப்புக் கலையில் வல்லவர். தனது ஆசான் இறந்தபின், இளம் வயதிலேயே ஜப்பானை விட்டு இந்தியாவுக்குத் தப்பி வருகிறார். இந்தியாவில் இருக்கும் பிரகாஷ் ராஜ், பவன் கல்யாணுக்கு அடைக்கலம் தருகிறார். ஒரு கட்டத்தில் பிரகாஷ் ராஜ் குடும்பத்தின் பாதுகாவலராக பவன் கல்யாண் மாறுகிறார்.
ஒருநாள் மும்பையில் இருக்கும் துறைமுகத்திற்கு ஆர்.டி.எக்ஸ் வெடிபொருட்கள் வருகிறது. இதில் பிரகாஷ் ராஜுக்கும், எதிரிக்கும் பிரச்சனை ஏற்படுகிறது. இந்த மோதலில் பிரகாஷ் ராஜ் மகன் கொல்லப்படுகிறார். இறுதியில் பிரகாஷ் ராஜ் மகன் கொல்லப்பட்டதற்கு யார் காரணம்? ஆர்.டி.எக்ஸ் வெடிபொருட்கள் பின்னால் இருக்கும் கும்பல் யார்? பவன் கல்யாண் என்ன செய்தார்? என்பதை படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் பவன் கல்யாண், கம்பீரம், ஆக்ஷன், வசனம் என ரசிகர்களுக்கேற்ப பர்ஃபார்மன்ஸ் கொடுத்திருக்கிறார். குறிப்பாக அவரது இன்ட்ரோவும், களைகட்டும் ஆக்ஷன் காட்சிகளும் தியேட்டரில் விசில் பறக்கிறது.
நாயகியாக நடித்திருக்கும் பிரியங்கா அருள் மோகன், காதலி பாத்திரத்தில் சின்ன அளவில்தான் வந்தாலும் அழகாகவும், எளிமையாகவும் நடித்திருக்கிறார்.
இம்ரான் ஹாஷ்மி ஸ்டைலாகத் தோன்றுகிறார். அர்ஜுன் தாஸ் மற்றும் ஷ்ரியா ரெட்டி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். பிரகாஷ் ராஜ் எப்போதும் போல இயல்பாக நடித்துள்ளார். பெரிய காட்சிகள் இல்லாவிட்டாலும், அவர் திரையில் தோன்றும் காட்சிகள் சிறப்பாக உள்ளன.
இயக்கம்
ஏற்கனவே நாம் பல படங்களில் பார்த்த கேங்ஸ்டர் கதையை இயக்கியிருக்கிறார் இயக்குனர் சுஜித். குடும்பத்தை பாதுகாக்கும் ஹீரோ, மும்பை பின்னணியில் கேங்ஸ்டர் கும்பல் என பழைய கதையை தூசி தட்டி கொடுத்து இருக்கிறார். படம் முழுதும் வன்முறைக் காட்சிகளால் நிரம்பி இருக்கிறது. முழுக்க பவன் கல்யாண் ரசிகர்களுக்காக எடுத்தது போல் இருக்கிறது. அனைத்து தர ரசிகர்களும் பிடிப்பதில் சந்தேகம் தான்.
இசை
தமன் இசையில் பாடல்கள் சுமாரான வரவேற்பு, ஆனால் பின்னணி இசை தான் படத்தின் உயிராக அமைத்து இருக்கிறார். பவன் கல்யாண் வரும்போது ஒலிக்கும் பின்னணி இசை அரங்கமே அதிரவைக்கிறது.
ஒளிப்பதிவு
ரவி கே சந்திரன், மனோஜ் பரமம்சா ஆகியோரின் ஒளிப்பதிவு இருட்டான லொக்கேஷன்கள், கேங்ஸ்டர் உலகம், சண்டை காட்சிகள் அனைத்தும் கலர்ஃபுல்லாக படம் பிடிக்கப்பட்டுள்ளது.
தயாரிப்பு
இப்படத்தை டிவிவி எண்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ளது.

