ஸ்ட்ரீட் பைட்டர்

ஸ்ட்ரீட் பைட்டர் - திரைவிமர்சனம்

வித்யுத் முதல் முறையாக நடித்துள்ள ஹாலிவுட் படம் ஸ்ட்ரீட் பைட்டர்.
Published on: 
ஸ்ட்ரீட் பைட்டர் - திரைவிமர்சனம் (2.5 / 5)

துப்பாக்கி, அஞ்சான் படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்த வித்யுத் ஜாம்வால் இந்தியில் ஆக்ஷன் படங்களில் ஹீரோவாக நடித்து வந்தார். அவர் முதல் முறையாக நடித்துள்ள ஹாலிவுட் படம் ஸ்ட்ரீட் பைட்டர்.

தற்போது திரைக்கு வந்துள்ள இப்படம் ஜப்பானிய நிறுவனமான கேப்காம் உடைய 'ஸ்ட்ரீட் பைட்டர்' என்ற பிரபல வீடியோ கேமை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த கேமில் உலகின் வெவ்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்கள் கதாபாத்திரங்களாக வருகின்றனர். ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் அதற்கே உரிய பாணியும், வித்தியாசமான தாக்குதல் முறையும் உண்டு.

இதை மையமிட்டே ஸ்ட்ரீட் பைட்டர் படமும் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் வித்யுத், தல்சிம் என்ற கதாபாத்திரத்தில் வித்தியாசமான தோற்றத்தில் நடித்துள்ளார். இருப்பினும் இதில் வித்யுத் முதன்மை பாத்திரம் இல்லை.

கதை

ரியூ (ஆண்ட்ரூ கோஜி) மற்றும் கென் மாஸ்டர்ஸ் (நோவா சென்டினியோ) இருவரும் தற்காப்புக் கலைகளில் சிறந்தவர்களாக உள்ளனர். ஆனால் காலப்போக்கில் அவர்களின் பாதைகள் பிரிகின்றன.

சில ஆண்டுகளுக்கு பின் உலகெங்கிலும் உள்ள வீரர்கள் தங்கள் வலிமையை வெளிப்படுத்த கலந்துகொள்ளும் 'வேர்ல்ட் வாரியர் டோர்னமென்ட்' போட்டியில் பங்கேற்ற சுன் லி (கலினா லியாங்) அவர்களை அழைக்கிறாள்.

ஆனால் படத்தில் இந்த போட்டி மையக்கரு இல்லை. மாறாக ரியூ மற்றும் கென்னின் உறவு, சுன் லியின் பழிவாங்கல், மற்றும் பைசனின் சதித்திட்டம் ஆகியவை முதன்மை பெறுகின்றன.

சதியும் பழைய காயங்களும் ரியூவையும் கென்னையும் ஒரு கடினமான போருக்குள் தள்ளுகின்றன.

அவர்கள் தங்கள் எதிரிகளை எதிர்கொள்வதோடு மட்டுமல்லாமல், தங்கள் கடந்த கால கேள்விகளுக்கும் பதில் கண்டுபிடிக்க வேண்டும்.

இயக்கம்

இயக்குநர் கிடாவோ சகுராய், விளையாட்டின் வண்ணமயமான உலகத்தையும் அதன் பன்முக கதாபாத்திரங்களையும் திரையில் உயிர்ப்பிக்க முயன்றிருக்கிறார்.

படத்தின் சிறப்பம்சம், வீடியோ கேம் போன்ற அதன் உலகம்தான். கதாபாத்திரங்களின் ஆடைகள், தோற்றம் மற்றும் சண்டை காட்சிகள் ரசிக்கும்படி இருக்கின்றன.

அதிரடி ஆக்ஷனுக்கு மத்தியில் நகைச்சுவையும் இந்தப் படத்தின் ஒரு முக்கிய பலமாகும்.

கதாபாத்திரங்களின் தோற்றங்களும் உடைகளும் ஈர்க்கக்கூடியவையாக இருந்தாலும், கதையில் உள்ள அதிகப்படியான கதாபாத்திரங்களால் படம் தொய்வடைகிறது. சில சண்டைகள் விரைவாக முடிந்துவிடுகின்றன.

இருப்பினும் வீடியோ கேம் கதாபத்திரங்களை அப்படியே திரைக்கு கொண்டு வந்து நியாயம் செய்ய முயன்றுள்ளது படம்.

ஒளிப்பதிவு

படத்தின் வண்ணமயமான விளையாட்டு உலகமும், உடைகளும் அனிமேஷன்களும் கண்ணை கவரும் வகையில் உள்ளன.

சண்டைக் காட்சிகளில் பல்வேறு கேமரா கோணங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

ஆனால் சில சமயங்களில், வேகமான cutகளும் close-upகளும் சண்டைக் காட்சிகளை தெளிவாக பார்ப்பதை கடினமாக்குகின்றன.

நடிப்பு

ரியூவாக ஆண்ட்ரூ கோஜி தீவிரமாகவும், கென்னாக நோவா சென்டினியோ விட்டேற்றியாகவும் தங்கள் பாத்திரங்களை நன்குணர்ந்து நடித்துளள்னர்.

மேலும் முன்னாள் டபில்யு டபில்யு மல்யுத்த வீரர் ரோமன் ரெய்ன்ஸ் அகுமாவாக நடித்துள்ளார். ஜேசன் மோமோ பிளாங்காவாக நடித்துள்ளார்.

சில கதாபாத்திரங்களுக்கு இன்னும் அதிக நேரம் கொடுக்கப்பட்டிருந்தால், அவர்கள் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க முடியும் என்று தோன்றுகிறது.

வித்யுத் ஜாம்பாலின் கதாபாத்திரம் எப்படி?

இந்திய ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் வகையில் இந்திய சண்டை வீரர் வித்யுத் நடித்துள்ள தஸ்லிம் கதாபாத்திரம் முக்கியத்துவம் பெற தவறுகிறது.

சண்டை காட்சிகளில் நிபுணரான வித்யுத்துக்கு திரைப்படத்தில் தனது திறமையை வெளிப்படுத்த அவருக்கு அதிக வாய்ப்பு கிடைக்கவில்லை.

இருப்பினும் வித்யுத்தை அதுபோன்ற ஒரு பாத்திரத்தில் காண்பதே ஒரு வகையில் சுவாரஸ்யமானதாக அமைந்துள்ளது. திரைப்படத்தில் வித்யுத்தின் காட்சிகள் சுமார் மூன்று நிமிடங்கள் மட்டுமே உள்ளது. கதையில் அவரது பங்கு பெரிதாக இல்லை.

பார்க்கலாமா?

ஆக்‌ஷன் மற்றும் பொழுதுபோக்கு படமாக ஸ்ட்ரீட் பைட்டர் ஈர்க்கிறது. வீடியோ கேம் ரசிகர்கள் ரசிகர்கள் தங்களுக்குப் பிடித்த கதாபாத்திரங்களை திரையில் காண்பதை ரசிக்கலாம்.

ஆனால் படம் முழுமையாக ஈர்க்கவில்லை. வித்யுத் ஜம்வாலுக்காக படத்தை பார்க்க செல்பவர்கள் ஏமாற்றமடையலாம்.

X

Maalai Malar
www.maalaimalar.com