ராம் அண்ட் லீலா படத்தின் காட்சி
ராம் அண்ட் லீலா படத்தின் காட்சி

ராம் அண்ட் லீலா- திரை விமர்சனம்

கலகலப்பான கதாபாத்திரத்தில் ரியோ அசத்தியுள்ளார். அவரது ஜாலியான நடிப்பு படம் முழுக்க ரசிக்க வைக்கிறது.
Published on
ராம் அண்ட் லீலா- திரை விமர்சனம் (3 / 5)

சில சில குறைகள் இருந்தாலும், சிரித்து மகிழும்படியான காட்சிகளை அடுக்கி பொழுதுபோக்கு படைப்பாக கொடுத்திருக்கிறார், இயக்குனர் ராமச்சந்திரன் கண்ணன்.

கதை

திருமண வயதை தாண்டியும் தனக்கேற்ற பெண் கிடைக்காமல் சோகத்தில் சுற்றும் ரியோ, ஒரு ரெயில் பயணத்தின்போது வர்திகாவை சந்திக்கிறார். இருவரும் காதலில் விழுகிறார்கள்.

ஆனால் ரியோவுக்கு, வர்திகா ஒரு 'கண்டிஷன்' போடுகிறாள். அதாவது 'மாலை 6 மணிக்கு மேல் தன்னை சந்திக்க கூடாது, வீட்டை விட்டு வெளியே வரமாட்டேன்' என்பது தான் அது.

வர்திகாவின் அழகில் சொக்கிப்போகும் ரியோ, அந்த கண்டிஷனை ஏற்கிறார், காதலிக்கவும் தொடங்குகிறார்.

ஒருகட்டத்தில் வர்திகா விதித்த நிபந்தனை, ரியோவுக்கு பல சிக்கல்களை உண்டாக்குகிறது. காதலியின் 6 மணி ரகசியத்தை அறியவும் துடிக்கிறார். பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு வர்திகாவின் நிபந்தனையின் பின்னால் இருக்கும் ரகசியத்தை அறியும் ரியோ, அதிர்ச்சியில் உறைகிறார். மெல்லவும் முடியாமல், சொல்லவும் முடியாமல் தவிக்கிறார்.

வர்திகாவின் பிரச்சனை என்ன? ரியோ - வர்திகா காதல் திருமணத்தில் முடிந்ததா? என்னதான் நடந்தது? என்பதே கலகலப்பான மீதி கதை.

நடிகர்கள்

கலகலப்பான கதாபாத்திரத்தில் ரியோ அசத்தியுள்ளார். அவரது ஜாலியான நடிப்பு படம் முழுக்க ரசிக்க வைக்கிறது. திருமணத்துக்காக ஏங்கும் இளைஞரின் பிரதிபலிப்பு 'பளிச்'சிடுகிறது. அனுபவமோ ரியோ...

அழகாலும், அளவான நடிப்பாலும் கவர்கிறார், வர்திகா. அவரை இன்னும் பயன்படுத்தி இருக்கலாம். சேத்தன் - மாளவிகா அவினாஷின் கூட்டணியில் கலகலப்பு கியாரண்டி. தாபியா அபு, முனீஸ்காந்த், பாலாஜி தியாகராஜன், தீபா வெங்கட், மா.கா.பா.ஆனந்த், காத்தாடி ராமமூர்த்தி ஆகியோரும் பொருத்தமான தேர்வு.

தொழில்நுட்ப குழு

மல்லிகார்ஜூன் ஒளிப்பதிவில் காட்சிகள் அழகு. அன்கிட் மேனனின் இசையில் பாடல்கள் உருகும் மெழுகு. கலகலப்பான காட்சிகள் படத்துக்கு பலம். சமீபத்தில் வெளியான ஒரு படத்தின் சாயல் தெரிந்தாலும், நேர்த்தியான திரைக்கதையால் அதை மறக்கடித்து விட்டார்கள். லாஜிக் மீறல்களை கொஞ்சம் தவிர்த்திருக்கலாம்.

சில சில குறைகள் இருந்தாலும், சிரித்து மகிழும்படியான காட்சிகளை அடுக்கி பொழுதுபோக்கு படைப்பாக கொடுத்திருக்கிறார், இயக்குனர் ராமச்சந்திரன் கண்ணன்.

ராம் அண்ட் லீலா - நூதன காதல்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com