Naruvee
Naruvee(3 / 5)
கதைக்களம்
குன்னூர் அருகே இருக்கும் மலை கிராமத்தில் அடிக்கடி ஆண்கள் மர்மமான முறையில் இறக்கிறார்கள். மர்ம மரணங்களுக்கு காரணம் என்ன என்பதை கண்டுபிடிப்பதற்காக சென்னையில் இருந்து மூன்று இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் அங்கு புறப்பட்டு செல்கின்றனர். அங்கு அவர்களுக்கு பல பிரச்சினைகள் வருகிறது.
இறுதியில் குன்னூர் மலை கிராமத்திற்கு சென்ற இளைஞர்களுக்கு என்ன பிரச்சனை வந்தது? எப்படி சமாளித்தார்கள்? ஆண்கள் மர்ம மரணத்திற்கு காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
பள்ளி ஆசிரியராக வரும் டாக்டர் ஹரிஷ் தனது இயல்பான நடிப்பினாலும் கரடு முரடான மலை பகுதிகளுக்கு சென்று கிராம மக்களின் குழந்தைகளுக்கு கல்வி கற்றுக் கொடுப்பது என நடிப்பால் கவர்கிறார். மாதவி கதாபாத்திரத்தில் வரும் சிறுமி படிப்பில் படு சுட்டி பெண்ணாக நன்றாக படித்து நல்ல நிலையை அடைய வேண்டும் என்று ஏக்கத்துடன் நடித்து கவனிக்க வைத்து இருக்கிறார்.
மலைப்பகுதியில் மர்மங்களை கண்டறிவதற்காக வரும் பாடினி குமார் திடீரென அமானுஷ்ய நிகழ்வுகளால் அவர் அலறி துடிக்கும் காட்சிகளில் நல்ல நடிப்பை பிரதிபலித்துள்ளார். அடிக்கடி பித்து பிடித்தவர் போல் இருப்பது காணாமல் போன மாமாவை கண்டுபிடித்து தீர்வேன் என்ற லட்சியத்துடன் போராடும் காட்சிகளில் கேத்ரின் வருணா நேர்த்தியான நடிப்பை கொடுத்துள்ளார். மேலும் விஜே பப்பு, ஜீவா ரவி, பிரவீனா, முருகானந்தம் ஆகியோர் நடிப்பு படத்துக்கு பக்கபலம்.
இயக்கம்
சஸ்பென்ஸ் திரில்லர் கதையை அமானுஷ்யம் கலந்து சொல்லி இருக்கிறார் இயக்குனர் சுபராக் எம். ஆண்களுக்கு ஆபத்தான வனப்பகுதி, பெண்களை சுற்றி நடக்கும் வினோத சம்பவங்கள், என்று படம் முழுவதும் பல சுவாரஸ்யமான விசயங்கள் வைத்து இருக்கிறார். பழங்குடியின மக்களுக்கு கல்வி எவ்வளவு முக்கியம் என்பதை சொல்லியிருப்பது சிறப்பு. திரைக்கதையில் கவனம் செலுத்தி இருந்தால் கூடுதலாக ரசித்து இருக்கலாம்.
ஒளிப்பதிவு
குன்னூர் மலை கிராம அழகை பார்வையாளர்களுக்கு கடத்தி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஆனந்த் ராஜேந்திரன்.
இசை
இசையமைப்பாளர் அஸ்வத் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை ரசிக்க வைக்கிறது.
தயாரிப்பு
அழகு பாண்டியன் இப்படத்தை தயாரித்துள்ளார்

