லெஜண்ட் சரவணனின் 'லீடர்' – திரைவிமர்சனம்
'லீடர்' – திரைவிமர்சனம்(4 / 5)
கார் மெக்கானிக்காக இருக்கும் லெஜண்ட் சரவணன், தூத்துக்குடி பகுதியில் மகளுடன் வாழ்ந்து வருகிறார். இவர் ஹார்பரில் வரும் கார்களுக்கு சர்வீஸ் செய்து வருகிறார். ஹார்பரில் சட்டவிரோதமாக கண்டெய்னர் ஒன்று இருப்பதாகவும் அதில் ஏதோ ஒரு மர்மம் இருப்பதாகவும் போலீஸ் அதிகாரியான ஆண்ட்ரியா சந்தேகப்படுகிறார். இதை லெஜண்ட் சரவணன் மூலம் கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார். ஆனால் அதற்கு லெஜண்ட் சரவணன் மறுப்பு தெரிவிக்கிறார்.
ஆனால் ஆண்ட்ரியா, லெஜண்ட் சரவணன் சரவணனை பகடைக்காயாக வைத்து கண்டெய்னரில் இருக்கும் மர்மத்தையும் அதற்கு பின்னாடி இருக்கும் பாகுபலி பிரபாகரனையும் பிடிக்கிறார். மேலும் கண்டெய்னரில் இருக்கும் பொருட்களை அழித்து பாகுபலி பிரபாகரனை லெஜெண்ட் சரவணன் கொலை செய்கிறார். கண்டெய்னரில் இருக்கும் பொருளின் சொந்தக்காரரான சந்தோஷ் பிரதாப் லெஜண்ட் சரவணனை பழி தீர்க்க வருகிறார்.
இறுதியில் சந்தோஷ் பிரதாப் லெஜண்ட் சரவணனை பழி தீர்த்தாரா? லெஜண்ட் சரவணன் யார்? கண்டெய்னரில் இருக்கும் பொருட்களை லெஜண்ட் சரவணன் அழிக்க காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் நாயகனாக வரும் லெஜண்ட் சரவணன், தனது முதல் படத்தை விட இந்த படத்தில் முன்னேற்றம் காண்பித்து இருக்கிறார். மாஸ் சீன்கள், ஆக்ஷன் காட்சிகள், ஸ்டைலிஷ் ஆகியவற்றில் கச்சிதமாக பொருந்தி இருக்கிறார். குறிப்பாக ஆக்ஷன் பகுதிகளில் கவனிக்க வைத்து இருக்கிறார். எமோஷனல் காட்சிகளில் கண்கலங்க வைத்து இருக்கிறார்.
போலீஸ் அதிகாரியாக வரும் ஆண்ட்ரியா மற்றும் ஷாம் இருவரும் சிறப்பாக நடித்து திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறார்கள். நாயகியாக நடித்திருக்கும் பயல் ராஜ்புத் அழகாக வந்து அளவான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். வில்லனாக நடித்திருக்கும் சந்தோஷ் பிரதாப், மிரட்டி இருக்கிறார்.
இயக்குநர் துரை செந்தில்குமார், முழுக்க கமர்ஷியல் பாணியில் கதையை நகர்த்தியிருக்கிறார். ஆக்ஷன், சென்டிமெண்ட், மாஸ் டயலாக் ஆகியவற்றை சரியான அளவில் கொடுத்து இருக்கிறார். படம் ஆரம்பம் முதல் இறுதி வரை விறுவிறுப்பாக திரைக்கதையே நகர்த்தி இருக்கிறார்.
படத்தின் மிகப்பெரிய பலம் அதன் ஆக்ஷன் மற்றும் ஜிப்ரானின் பின்னணி இசை. பெரிய அளவில் எடுத்திருக்கும் காட்சிகள், மாஸ் பில்ட்அப் எல்லாம் திரையில் பார்க்கும் போது ரசிக்க முடிகிறது. வெங்கடேஷின் ஒளிப்பதிவு சிறப்பு.

