சாமி vs சாமியார்... மூக்குத்தி அம்மன் விமர்சனம்

நயன்தாரா, ஆர்ஜே.பாலாஜி, ஊர்வசி நடிப்பில் உருவாகி இருக்கும் மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் விமர்சனம்.
மூக்குத்தி அம்மன் விமர்சனம்
மூக்குத்தி அம்மன் விமர்சனம்
Published on

ஆர்.ஜே.பாலாஜியின் அம்மா ஊர்வசி திருப்பதி கோவிலுக்கு செல்ல பல ஆண்டுகளாக முயற்சி செய்கிறார். ஆனால் போக முடியவில்லை. இதனால் குல தெய்வம் மூக்குத்தி அம்மன் கோவிலுக்கு சென்றால் கஷ்டங்கள் போகும் என்று ஒருவர் சொல்ல அங்கு குடும்பத்துடன் தங்குகிறார் ஆர்.ஜே.பாலாஜி.

அங்கு தனது கஷ்டத்தைச் சொல்லிவிட்டு ஆர்.ஜே.பாலாஜி தூங்கும் போது இரவில் மூக்குத்தி அம்மனாக தோன்றுகிறார் நயன்தாரா. அதன்பின் ஆர்.ஜே. பாலாஜியுடன் பயணிக்கும் நயன்தாரா, அவரின் கஷ்டங்களை போக்கினாரா? 11 ஆயிரம் ஏக்கர் நிலத்தை ஆக்கிரமிக்கும் செய்தி என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் அம்மனாக வரும் நயன்தாரா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி அழகு சேர்த்திருக்கிறார். பல விஷயங்களை சாதாரணமாக வசனம் மூலம் சொல்லிவிட்டு செல்கிறார். காமெடி காட்சிகளிலும் கலக்கி இருக்கிறார். 

நாயகனாக நடித்திருக்கும் ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் கைத்தட்டல் பெறுகிறார். அம்மனை பார்த்தவுடன் நம்பாமல் சோதிப்பது, பணம் கிடைத்தவுடன் சந்தோஷப்படுவது என பல காட்சிகளில் ரசிக்க வைக்கிறார். 

அம்மாவாக வரும் ஊர்வசியின் நடிப்பு அற்புதம். பொய் சொல்வது, சமாளிப்பது, கணவருக்காக எங்குவது என நடிப்பில் பளிச்சிடுகிறார். தாத்தா மௌலி, தங்கை ஸ்மிருதி வெங்கட் ஆகியோர் திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறார்கள். போலிச் சாமியாராக வரும் அஜய் கோஷ் சிறந்த தேர்வு. ஆனால் பல இடங்களில் இவரது நடிப்பு செயற்கை தனமாக அமைந்துள்ளது. 

கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருக்கும் ஆர்.ஜே.பாலாஜி, என்.ஜே.சரவணனுடன் இணைந்து இயக்கி இருக்கிறார். முதல்பாதி கலகலப்பாகவும், இரண்டாம் பாதி சுவாரஸ்யமாகவும் கொடுத்திருக்கிறார்கள். படத்திற்கு பெரிய பலம் வசனங்கள். அதுபோல் கதாபாத்திரங்களிடம் அருமையாக வேலை வாங்கியிருக்கிறார்கள்.

தினேஷ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவு நாகர்கோவிலின் அழகை அப்படியே கடத்தியுள்ளது. நிறைய காட்சிகள் குளிர்ச்சியாக உள்ளது. கிரிஷ் இசையில் பாடல்கள் அனைத்தும் படத்திற்கு தடையாக இருக்கிறது.   

மொத்தத்தில் 'மூக்குத்தி அம்மன்' கலகலப்பான தரிசனம்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com