‘விவேகம்’ படப்பிடிப்பின் போது காயம்: நடிகர் அஜித்துக்கு ஆபரேசன்

‘விவேகம்’ படப்பிடிப்பின் போது ஏற்பட்ட காயத்திற்காக நடிகர் அஜித்துக்கு ஆபரேசன் செய்யப்பட்டுள்ளது. அடுத்த 6 மாதங்களுக்கு படத்தில் நடிக்க மாட்டார் என்றும் கூறப்படுகிறது.
‘விவேகம்’ படப்பிடிப்பின் போது காயம்: நடிகர் அஜித்துக்கு ஆபரேசன்
Published on

சிவா இயக்கத்தில் உருவான இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு பல்கேரியா நாட்டில் நடந்தது. இதில் அதிரடி சண்டை காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இப்படத்துக்காக அஜித் தீவிரமாக உடற்பயிற்சி செய்து உடலை கட்டுக்கோப்பாக மாற்றினார்.

பல்கேரியாவில் படமாக்கப்பட்ட ஒரு சண்டை காட்சியின் போது கோலிவுட் ஸ்டண்ட் கலைஞர்களுடன் மோதுவது படமாக்கப்பட்டது. அப்போது எதிர்பாராத விதமாக அஜித்தின் தோள் பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அவரை அங்குள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு முதல்உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

வலியை தாங்கிக்கொண்டு படப்பிடிப்பில் கலந்து கொண்டார். என்றாலும் ஒரு மாதத்துக்குள் தோள் பட்டையில் ஆபரேசன் செய்துகொள்ள வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுரை கூறினார்கள்.

சென்னை திரும்பிய அவர் வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்றுவந்தார். இந்த நிலையில் கடந்த 7-ந்தேதி சென்னையில் உள்ள ஒரு பிரபல ஆஸ்பத்திரியில் அஜித் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள், தோள்பட்டையில் ஆபரேசன் செய்தனர். வெற்றிகரமாக ஆபரேசன் நடந்ததாக ஆஸ்பத்திரி நிர்வாகம் அறிவித்துள்ளது.

தீவிரசிகிச்சை பிரிவில் ஒருநாள் இருந்து சிகிச்சை பெற்ற அஜித் பின்னர் வீடு திரும்பினார். தற்போது அவர் வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வருகிறார். அஜித் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

அமைதியாக சிகிச்சை பெறுவதற்காகவே அவர் உடனடியாக வீடு திரும்பினார். அங்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆபரேசன் காரணமாக அஜித் இன்னும் 6 மாதங்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுரை வழங்கி உள்ளனர். எனவே இன்னும் 6 மாதங்களுக்கு எந்த படத்திலும் நடிக்க வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது.

அஜித்துக்கு ஏற்கனவே பல்வேறு விபத்துக்களில் பலத்த காயம், எலும்பு முறிவு போன்றவை ஏற்பட்டுள்ளது. இதற்காக இடுப்பு எலும்பு, முதுகுதண்டு, கால் ஆகியவற்றில் ஆபரேசன் நடந்துள்ளது. இப்போது தோள் பட்டையில் ஆபரேசன் செய்யப்பட்டிருக்கிறது.

அஜித்தை யாரும் பார்க்க முயற்சிக்க வேண்டாம் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com