அதர்வா படத்தில் மேயாத மான் நடிகை

ஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா நடிப்பில் உருவாகி வரும் ‘பூமராங்’ படத்தில் ‘மேயாத மான்’ நடிகை நடித்து வருகிறார். #Boomerang
அதர்வா படத்தில் மேயாத மான் நடிகை
Published on

அதர்வா நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘பூமராங்’. ஆர்.கண்ணன் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் மேகா ஆகாஷ் ஜோடியாக நடித்து வருகிறார். மேலும் உபன் படேல் வில்லனாக நடித்து வருகிறார். இந்த படத்தை ஆர்.கண்ணனின் மசாலா பிக்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றது. 

மிகப்பெரிய பொருட்செலவில் இந்த படம் தயாராகி வருகின்றது. இந்த படத்தின் ஒரு பாடலுக்காக இப்படத்தின் கலை இயக்குனர் ஷிவா யாதவ் ஒரு கோடி ருபாய் செலவில் ஒரு மிக பிரம்மாண்ட செட்டை எழுப்பியுள்ளார். இந்த பாடல், பிரம்மாண்டமான செட் மற்றும் அருமையான நடன இயக்கத்தின் துணையுடன் மிக சிறப்பாக வந்திருப்பதாக கூறப்படுகிறது.

இது குறித்து இயக்குனர் ஆர்.கண்ணன் கூறும்போது, ‘ஒரு முக்கியமான மற்றும் வலுவான சமுதாய கருத்தை கொண்ட ஆக்‌ஷன் படம் தான் 'பூமராங்'. இப்படத்தில் தேசப்பற்று பாடல் ஒன்று உள்ளது. இந்த பாடலிற்காக முற்றிலும் வித்யாசமான செட் அமைக்கலாம் என்பதற்காக ஒரு மிக பிரம்மாண்ட செட்டை அமைத்தோம். இசையமைப்பாளர் ரதன் மற்றும் பாடலாசிரியர் விவேக் ஆகியோர் எனது இந்த கனவை அழகாக புரிந்துகொண்டு நான் எதிர்பார்த்ததை விட சிறப்பான பாடலை தந்துள்ளனர். 

கலை இயக்குனர் ஷிவா யாதவின் பிரம்மாண்டமான செட்டும் பிருந்தா அவர்களின் அசத்தலான நடன இயக்கத்திலும் இந்த பாடல் மேலும் சிறப்பாகியுள்ளது. சுமார் 2000 ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்கள் மற்றும் நமது சினிமா துறையின் சிறந்த 100 நடன கலைஞர்கள் இந்த பாடலில் உள்ளனர்.

பூமராங் படத்தின் மற்றுமொரு சிறப்பம்சம் "மேயாத மான்" படத்தில் நடித்து ரசிகர்களிடம் சிறந்த பெயர் வாங்கிய இந்துஜா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பது தான். மிகவும் சவாலான கதாபாத்திரம் அது. அந்த வேடத்தில் நடிக்கும் நடிகையர் தேர்வு நடக்கும் போது என் குழுவினர் அனைவரின் ஏகோபித்த தேர்வு இந்துஜாதான். அந்த அளவுக்கு முதல் படத்திலேயே இந்த பெயர் வாங்கியது பெரிய விஷயம்.

X

Maalai Malar
www.maalaimalar.com