பிந்துமாதவி
பிந்துமாதவி

பிந்து மாதவியிடம் எந்த வித்தியாசமும் தெரியவில்லை - கழுகு-2 இயக்குனர்

நடிகை பிந்து மாதவியிடம் எந்த வித்தியாசமும் தெரியவில்லை என்று கழுகு-2 பட இயக்குனர் சத்யசிவா கூறியுள்ளார்.
Published on

2012ல் வெளியான ‘கழுகு’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சத்யசிவா. இடையில் சில படங்களுக்கு பிறகு ஏழு வருடங்கள் கழித்து மீண்டும் ஒரு அழுத்தமான கதையுடன் ‘கழுகு-2’ என்ற படத்தை உருவாக்கியுள்ளார். முதல் பாகத்தில் நடித்த கிருஷ்ணா, பிந்து மாதவி என அதே ஜோடியுடன் காளி வெங்கட், எம்.எஸ்.பாஸ்கர் என முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களும் இந்த படத்தில் உடன் பயணிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ள இந்த படம் வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

கழுகு முதல் பாகம் ரசிகர்களிடம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது குறிப்பாக அந்த படத்தின் கிளைமாக்ஸ். இதனாலேயே இந்த இரண்டாம் பாகம் ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படம் குறித்து இயக்குனர் சத்யசிவா கூறும்போது, ‘கழுகு படம் போலவே இந்தப் படத்தின் கதையும் முழுக்க முழுக்க காட்டில் நடக்கும் கதைதான். 

கழுகுக்கு சமமான விஷயம் இந்தப் படத்திலும் இருக்கிறது. இரண்டுக்குமே காடு என்பது பொதுவான அம்சமாக இருந்ததால் இந்த படத்திற்கு கழுகு-2 என்கிற டைட்டில் பொருத்தமானதாக இருக்கும் என முடிவு செய்தோம். அதேசமயம் முதல் பாகத்திற்கும் இரண்டாம் பாகத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. காமெடியை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள திரில்லர் படம் என்று ‘கழுகு-2’வை சொல்லலாம்.

மீண்டும் கிருஷ்ணா, பிந்து மாதவி என எனக்கு நன்கு அறிமுகமான நட்சத்திரங்கள் என்பதால் படப்பிடிப்பில் எந்தவித சங்கடங்களும் ஏற்படவில்லை. கழுகு படத்தில் அறிமுகமான அதே பிந்துமாதவி தான் இப்போதும், எந்தவித மாற்றமும் இத்தனை வருடங்களில் அவரிடம் ஏற்படவில்லை. கழுகு படம் இயக்கும்போது எனக்கு புதியவராக இருந்த கிருஷ்ணா இப்போது கிட்டத்தட்ட உறவினர் போல மாறிவிட்டார்.

யுவன் சங்கர் ராஜாவின் இசை இந்த படத்திற்கு இன்னொரு புதிய வடிவத்தை கொடுத்திருக்கிறது. என் சொந்த ஊர் மூணார். அந்த பகுதியில் நடைபெற்ற ஒரு உண்மையான சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இந்த கதையை உருவாக்கி உள்ளேன். 

இந்தப்படத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் மக்களுக்கு இடையூறு செய்யும் ஆபத்தான மிருகமான செந்நாய்களை வேட்டையாடும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் கிருஷ்ணா. கழுகு படத்தைப் போல இந்த படத்திலும் அழுத்தமான ஒரு காதல் இருக்கிறது. அதே போல மனதை உருக வைக்கும் சென்டிமென்டான கிளைமாக்ஸ் காட்சியும் இந்த படத்தில் இருக்கிறது’ என்றார்.

மதுக்கூர் மூவி மேக்கர்ஸ் சார்பில் சிங்காரவேலன் தயாரித்துள்ள இந்தப்படத்தை ஸ்க்ரீன் சீன் மீடியா நிறுவனம் வரும் ஆக-1ஆம் தேதி பிரமாண்டமாக வெளியிடுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com