கமல் சுற்றுப்பயண விவரம் 16-ந்தேதி அறிவிப்பு, ஏற்பாடுகள் தீவிரம்

21-ந்தேதி கட்சியை தொடங்கும் கமல்ஹாசனின் சுற்றுப்பயண விவரம் வருகிற 16-ந் தேதி வெளியிப்பட இருக்கிறது. அதற்கான அறிவிப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கமல் சுற்றுப்பயண விவரம் 16-ந்தேதி அறிவிப்பு, ஏற்பாடுகள் தீவிரம்
Published on

நடிகர் கமல்ஹாசன் வருகிற 21-ந்தேதி புதிய கட்சி தொடங்குகிறார்.

அன்றைய தினம், ராமேஸ்வரத்தில் உள்ள முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் இல்லத்தில் இருந்து தனது அரசியல் பயணத்தை கமல் ஆரம்பிக்கிறார். முதல் கட்டமாக ராமநாதபுரம், மதுரை, தேனி மாவட்டங்களில் சுற்றுப் பயணம் செய்ய திட்டமிட்டுள்ளார்.

இதற்கான ஆலோசனை கூட்டம் சில தினங்களாக சென்னையில் நடந்தது. இதில், சுற்றுப்பயண விவரம், மக்களை எவ்வாறு சந்திப்பது?, கமல் நற்பணி மன்றத்தினர் எவ்வாறு ஏற்பாடுகளை செய்வது என்று ஆலோசிக்கப்பட்டது. ஒரு கிராமத்தை தத்து எடுப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.

கமலின் புதிய கட்சி பெயர் என்ன? கட்சியின் கொடி எவ்வாறு இருக்க வேண்டும் என்பது குறித்தும் மாநில மன்ற நிர்வாகிகளுடன் கமல் ஆலோசனை நடத்தினார்.

அமெரிக்காவில் உள்ள ஹார்வேர்டு பல்கலைகழகத்தில் பேசுவதற்காக கமல்ஹாசன் நேற்று அமெரிக்கா புறப்பட்டு சென்றார். 10-ந் தேதி பேசுகிறார். நிகழ்ச்சி முடிந்ததும் கமல் சென்னை திரும்புகிறார்.

வருகிற 14-ந்தேதி கமல் ஹாசன் சென்னை வருவார் என்று தெரிகிறது. அதன் பிறகு கட்சி பணிகளில் தீவிரமாக ஈடுபட திட்டமிட்டுள்ளார்.

15-ந்தேதி தனது சுற்றுப் பயணம் குறித்து முடிவு செய்கிறார். 21-ந்தேதி அப்துல் கலாம் வீட்டில் இருந்து எந்த எந்த இடங்களுக்கு செல்ல வேண்டும் என்ற முழு விவரமும் தயாராகி வருகிறது. அதற்கு இறுதி வடிவம் கொடுக்கிறார்.

சுற்றுப்பயண விவரங்களை 16-ந்தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறார். பொது மக்களை எந்த எந்த இடங்களில் சந்திக்கிறார்? எங்கு பேசுகிறார்? பொதுக்கூட்டம் நடைபெறும் இடங்கள் ஆகியவை அதில் இடம் பெறுகின்றன.

கமல் சுற்றுப்பயணத்துக்கான ஏற்பாடுகளை மன்ற நிர்வாகிகள் இப்போதே தொடங்கிவிட்டனர். முக்கிய இடங்களில் பொது மக்களுடன் கமல்ஹாசன் உரையாட திட்டமிட்டுள்ளார்.

மக்களின் விருப்பங்களை அறிந்து, அதன்படி கட்சியின் கொள்கைகள் வகுக்கப்படும் என்று மன்ற நிர்வாகிகள் தெரிவித்தனர். முதல் கட்டமாக ராமேஸ்வரம், மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் நடைபெறும் சுற்றுப் பயணங்கள் முடிந்ததும் மற்ற மாவட்டங்களுக்கான சுற்றுப்பயண விவரங்கள் தயாரிக்கப்படுகின்றன. மார்ச் மாதத்துக்குள் அனைத்து மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் செய்ய கமல் திட்டமிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com