ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் கமல்ஹாசன், 2-வது நாளாக ஆலோசனை

ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் கமல்ஹாசன், 2-வது நாளாக ஆலோசனை நடத்தி வரும் நிலையில், கமலின் சுற்றுப்பயணம் மக்களிடம் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று கமல் ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் கமல்ஹாசன், 2-வது நாளாக ஆலோசனை
Published on

நடிகர் கமல்ஹாசன், தனது சுற்றுப்பயணம் குறித்து ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

பிப்ரவரி 21-ந் தேதி புதிய கட்சி தொடங்கும் கமல்ஹாசன், 23-ந்தேதி வரை முதல் கட்டமாக சுற்றுப் பயணம் செய்கிறார். இதுதொடர்பாக முதலில் அவர் சுற்றுப்பயணம் செய்யும் ராமநாதபுரம், மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட கமல் நற்பணி மன்ற நிர்வாகிகளை சந்தித்தார்.

அப்போது பிப்ரவரி 21-ந் தேதி ராமேஸ்வரத்தில் உள்ள அப்துல்கலாம் வீட்டில் இருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்குவது குறித்து மன்ற நிர்வாகிகளுடன் விரிவாக பேசினார்.

இதில் ரசிகர்கள் எவ்வாறு பங்கேற்க வேண்டும். தொடர்ந்து நடைபெறும் சுற்றுப்பயணத்தை எவ்வாறு கட்டுக்கோப்பாக நடத்த வேண்டும். இதில் மன்ற உறுப்பினர்கள் எப்படி பணிபுரிய வேண்டும் என்பது பற்றி கமல் எடுத்துக் கூறினார்.

ராமநாதபுரத்தில் பொதுக் கூட்டம் நடத்தவும் அதில் கமலின் கட்சி பெயர், கொடி, சின்னம் ஆகியவற்றை வெளியிடுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. பிப்ரவரி 21-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை 3 நாட்கள் சுற்றுப்பயணம் செய்யும் இடங்கள் பற்றி திட்டமிடப்பட்டது.

இன்று 2-வது நாளாக மன்ற நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் ஆலோசனை நடத்தினார். இதில் திருச்சி, தஞ்சை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் 23-ந் தேதிக்கு பிறகு அடுத்தக்கட்ட சுற்றுப் பயணத்தை எப்போது தொடங்குவது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்து.

ஆர்வமிகுதியால் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கமல் மன்ற நிர்வாகிகள் சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள கமலின் அலுவலகத்தில் வந்து குவிந்தனர். அவர்களில் முக்கிய நிர்வாகிகளும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர்.

முன்னதாக ஆழ்வார்பேட்டை அலுவலகத்துக்கு வந்த கமல்ஹாசனுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். விரைவில் கமலின் சுற்றுப்பயண விவரம் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்ப்பதாக மன்ற நிர்வாகிகள் தெரிவித்தனர். கமல் சுற்றுப்பயணம் மக்களிடம் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் நம்பிக்கையுடன் கூறினார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com