தயாரிப்பாளர் சங்கத்துடன் முக்கிய ஒப்பந்தத்தில் கையழுத்திட்ட கே செரா செரா

டிஜிட்டல் சேவை அமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தயாரிப்பாளர் சங்கம் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், தயாரிப்பாளர் சங்கம் கே செரா செரா அமைப்புடன் முக்கிய ஒப்பந்தத்தில் கையழுத்திட்டுள்ளது. #TFPC
தயாரிப்பாளர் சங்கத்துடன் முக்கிய ஒப்பந்தத்தில் கையழுத்திட்ட கே செரா செரா
Published on

தமிழகத்தில் உள்ள அனைத்து தியேட்டர்களிலும் டிஜிட்டல் முறையில் படங்கள் திரையிடப்படுகின்றன. தனியார் நிறுவனங்கள் இந்த சேவையை செய்து வருகின்றன. இதற்கான கட்டணத்தை பட தயாரிப்பாளர்களே கொடுத்து வருகிறார்கள்.

இதற்காக வசூலிக்கப்படும் கட்டணம் அதிகமாக உள்ளது. விளம்பர கட்டணத்தையும் டிஜிட்டல் சேவை நிறுவனங்களே பெற்றுக் கொள்கின்றன. இதனால் தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களை திரையிட லட்சக்கணக்கான ரூபாய் செலவு செய்யும் நிலை உள்ளது.

திரையங்குகளில் டிஜிட்டல் முறையில் படங்கள் திரையிடும் நிறுவனங்கள் கட்டணத்தை குறைக்கக் கோரி பட தயாரிப்பாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பட அதிபர்கள் போராட்டத்தால் மார்ச் 1-ந் தேதி முதல் தியேட்டர்களில் புதிய படங்கள் எதுவும் வெளியாகவில்லை. அதேபோல் மார்ச் 16-ஆம் தேதி முதல் சினிமா படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

கடந்த ஒரு மாத காலமாக போராட்டம் நடந்து வருவதால் தமிழ் திரையுலகம் முற்றிலுமாக முடங்கியுள்ளது. திரையரங்குகளிலும் புதிய படங்கள் எதுவும் வெளியாகவில்லை. தெலுங்கு, இந்தி, ஹாலிவுட் படங்கள் மட்டுமே அவ்வப்போது வெளியாகி வருகின்றன. 

இந்நிலையில், வடஇந்தியா முழுவதும் 1050 திரையரங்குகளில் டிஜிட்டல் சர்வீஸ் ப்ரவைடராக இருக்கும் மிகப்பெரிய நிறுவனமான கே செரா செரா (K Sera Sera) தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் நிர்ணயம் செய்த கட்டணத்தில் தமிழ் படங்களுக்கு தியேட்டர்களில் இ-சினிமாவை (E cinema), அதாவது டிஜிட்டல் சர்வீஸ் தருவதற்கும் மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தின் இரண்டாவது மாஸ்டரிங் யூனிட்டாக செயல்படுவதற்கும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்டது. இதன்மூலம் இ-சினிமாவுக்கும், இனி தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து மட்டுமே திரையரங்கங்களுக்கு நேரடியாக படம் கொடுக்கப்படும்.

முன்னதாக மைக்ரோப்ளக்ஸ் நிறுவனத்துடன் தயாரிப்பாளர் சங்கம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இது மாபெரும் மைல்கல்லாக கருதப்பட்ட நிலையில் அடுத்த டிஜிட்டல் சர்வீஸ் ப்ரவைடருடன் கையெழுத்திட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #TFPC #TamilCinemaStrike

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com