விஜய் சேதுபதி நடித்த சீதக்காதி பெயருக்கு எதிர்ப்பு

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சீதக்காதி’ படத்தின் பெயரை மாற்ற வேண்டும் என்று இந்திய தேசிய லீக் கட்சி வற்புறுத்தியுள்ளது. #Seethakkathi #VijaySethupathi
விஜய் சேதுபதி நடித்த சீதக்காதி பெயருக்கு எதிர்ப்பு
Published on

விஜய் சேதுபதி நடிப்பில் வரும் 21-ந் தேதி வெளியாக இருக்கும் படம் சீதக்காதி. நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தை இயக்கிய பாலாஜி தரணிதரன் இந்த படத்தை இயக்கி உள்ளார்.

ரம்யா நம்பீசன், காயத்ரி, இயக்குனர் மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்துக்கு சீதக்காதி என்று பெயர் வைத்ததற்கு இந்திய தேசிய லீக் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அந்த கட்சியின் மாநில தலைவர் தடா ஜெ.அப்துல் ரகீம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

சீதக்காதி என்ற பெயரில் பொழுதுபோக்கு திரைப்படம் எடுத்து இருப்பதாக தகவல் வருகிறது. சீதக்காதி தமிழர்களின் ஒரு அடையாளமாக வாழ்ந்தவர். இசுலாமியராக இருந்தாலும் அனைத்து  மக்களுக்காகவும், மனிதநேயத்திற்காகவும் வாழ்ந்த மாமனிதர் சீதக்காதி.

ஷெய். அப்துல் காதர் என்கிற சீதக்காதி பெயரை கொண்டு பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதியின் 25-வது திரைப்படமான “சீதக்காதி” வெளியிட இருப்பதாக செய்திகள் வருகின்றன.

விஜய் சேதுபதி பேட்டி அளிக்கும் போது சீதக்காதி ஒரு காமெடி திரைப்படம் என கூறியுள்ளார். இராமநாதபுரம் கீழக்கரையில் பிறந்த ஷெய்கு அப்துல் காதர் என்கிற சீதக்காதி 1698 வரையிலான காலகட்டத்தில் வாழ்ந்தவர்.

பன்முகங்கள் கொண்ட சீதக்காதி பெரிய வணிகர். வங்கம், சீனா, மலாக்கா போன்ற நாடுகளில் இருந்து தனது சொந்த கப்பல்கள் மூலம் முத்து, கிராம்பு, பாக்கு, மிளகு இறக்குமதி செய்து இந்தியாவில் விற்பனை செய்தவர். உமறுப் புலவரின் சீறாப்புராணம் பாடுவதற்க்கும் தமிழ் இலக்கியங்கள் வெளியிடுவதற்கும் நிதியுதவி செய்துள்ளார். கொடை வள்ளல் என்ற அடைமொழி கொண்டவர்.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சீதக்காதியின் கண்ணியத்தை சீரழிக்கும் எந்தவித நடவடிக்கையையும் இந்திய தேசிய லீக் கட்சி அனுமதிக்காது. ஆகையால் ஷெய்கு அப்துல் காதர் என்கிற சீதக்காதியின் சிறப்பை போற்றும் விதமாக இல்லாமல் பொழுதுபோக்கு படம் எடுத்து அதற்கு சீதக்காதி என பெயர் சூட்டுவதை இந்திய தேசிய லீக் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

உடனே சீதக்காதி என்ற பெயரை மாற்ற வேண்டும். இல்லை என்றால் சட்ட ரீதியாகவும், ஜனநாயக ரீதியாகவும் போராட்டம் நடத்த வேண்டிய அவசியம் ஏற்படும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். #Seethakkathi #VijaySethupathi

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com