

‘டைம் லைன் சினிமாஸ்’ சார்பாக சி.பி.கணேஷ், சுந்தர் அண்ணாமலை இருவரும் இணைந்து தயாரிக்கும் திரைப்படம் ‘எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்’.
லெக்ஷ்மி, மா உள்ளிட்ட குறும்படங்களை இயக்கி பிரபலமான சர்ஜூன்.கே.எம் இயக்கியிருக்கும் இந்த படத்தில் சத்யராஜ், வரலட்சுமி வித்தியாசமான பாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் கிஷோர், யோகிபாபு உள்பட பலரும் நடிக்கிறார்கள்.
இந்த படத்தின் போஸ்டர் ஒன்று வெளியாகி வரவேற்பை பெற்றிருந்தது. இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்த படத்தின் சிங்கிள் டிராக் ஒன்றை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. சுந்தரமூர்த்தி இசையில் கர்மா இஸ் அ பிட்ச் என துவங்கும் அந்த பாடலை இயக்குநர் கவுதம் மேனன் நாளை வெளியிட இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. கவுதம் மேனன் ஏற்கனவே சர்ஜுன் இயக்கிய இரு குறும்படங்களையும் வாங்கி வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆள் கடத்தலை மையமாக கொண்ட இக்கதை ஒரே நாளில் நடைபெறுவதாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு குழந்தை, தன் தாத்தாவுக்கு கதை சொல்லுவதாக அமைக்கப்பட்டுள்ள கதைக்களம், நம் கண்முன்னே காட்சிகளாய் விரியும் போது, ஒரு புதிய பரிமாணத்தை வெளிப்படுத்தும் விதமாக இந்த படம் உருவாகி உள்ளது. மே மாதம் படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. #Echcharikkai