திரைப்பட இயக்குனர் சிராஜ் மாரடைப்பால் மரணம்

பிரபல திரைப்பட இயக்குனர் சிராஜ் மாரடைப்பால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.
திரைப்பட இயக்குனர் சிராஜ் மாரடைப்பால் மரணம்
Published on

ராமராஜன் நடித்த ‘என்னைபெத்தராசா’, ‘தங்கத்தின் தங்கம்’, ‘ஊரெல்லாம் உன்பாட்டு’, மற்றும் ‘ராஜாங்கம்’, ‘சுயம்வரம்’ படங்களை இயக்கியவர் சிராஜ் (65).

சென்னை அசோக்நகரில் குடியிருந்தார். நேற்று இரவு 9 மணி அளவில் வீட்டில் இருந்த போது இயக்குனர் சிராஜூக்கு திடீர் என்று மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.

உடனே அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் சிராஜுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது என்றாலும் சிகிச்சை பலன் இல்லாமல் இயக்குனர் சிராஜ் இரவு 9.30 மணியளவில் மரணம் அடைந்தார்.

மறைந்த இயக்குனர் சிராஜ் உடல் அசோக் நகரில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. தகவல் அறிந்ததும் திரை உலகினர் அங்கு சென்று இறுதி அஞ்சலி செலுத்தினார்கள்.

இன்று மாலை 3.30 மணி யளவில் இறுதி ஊர்வலம் நடைபெறுகிறது. புலியூர் ஜிம்மா மசூதி வளாகத்தில் உடல் அடக்கம் நடைபெறுகிறது.

மரணம் அடைந்த இயக்குனர் சிராஜ் சொந்த ஊர் தேனி மாவட்டம் கம்பம். இவருக்கு ஆயிஷா என்ற மனைவியும் 3 மகள்களும் உள்ளனர். அவர்களுக்கு திருமணம் ஆகிவிட்டது.

பல்வேறு படங்களை இயக்கிய இவர், விஜயகாந்த் நடித்த படங்களுக்கும் கதை வசனம் எழுதி உள்ளார். தற்போது சிராஜ் இயக்கத்தில் ‘மின்னல்’ என்ற படம் தயாராகி இருக்கிறது.

இயக்குனர் சிராஜ் மறைவுக்கு திரை உலகினர் அனுதாபம் தெரிவித்து உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com