இங்கிலீஷ் படம்

ராம்கி, மீனாட்சி, சஞ்சீவ், ஸ்ரீஜா, சிங்கமுத்து நடிப்பில் குமரேஷ் குமார் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் ‘இங்கிலீஷ் படம்’ படத்தின் விமர்சனம்.
இங்கிலீஷ் படம்
Published on

பணத்திற்கு ஆசைப்பட்டு அந்த பங்களாவில் சஞ்சீவ் மற்றும் சிங்கமுத்து தங்குகிறார்கள். அந்த பங்களாவில் பேய் ஒரு உருவம் அவர்களை மிரட்டுகிறது. இவர்களை மிரட்டுவதற்காக நாயகி ஸ்ரீஜாவை ஒப்பந்தம் செய்கிறார் குமரேஷ் குமார். ஒரு வழியாக பேய் மிரட்டலுக்கு பயந்து இரவு முழுவதும் பங்களாவில் தங்கிவிடுகிறார்கள். மறுநாள் காலை, பெரிய தாதாவாக இருக்கும் ராம்கி அந்த வீட்டிற்கு வந்து சஞ்சீவை விரட்டுகிறார்.

அதுபோல் நாயகி ஸ்ரீஜாவையும் விரட்டுகிறார். சஞ்சீவும், ஸ்ரீஜாவும் பணத்திற்காக தங்களை ஒப்பந்தம் செய்த குமரேஷ் குமாரை தேடுகிறார்கள். அவரும் எனக்கும் பணம் தருவதாக கூறி உங்களை ஒப்பந்தம் செய்ய சொன்னார்கள். ஆனால், பணம் தரவில்லை. இதற்கு அந்த தாதா ராம்கி தான் காரணம் என்று கூறுகிறார்.

இறுதியில் தங்களை ஏமாற்றிய ராம்கியை பழிவாங்கினார்களா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் நாயகனாக நடித்திருக்கும் சஞ்சீவ் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். பாடல், நடனம், ரொமன்ஸ், பேய்க்கு பயப்படுவது என நடிப்பு திறனை வெளிப்படுத்த முயற்சித்திருக்கிறார். நாயகி ஸ்ரீஜா, பிக் பாக்கெட் பெண், பேயாக பயமுறுத்துதல் என நடித்திருக்கிறார். கிளாமர் காட்சிகளில் ரசிக்க வைத்திருக்கிறார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையில் தாதாவாக தோன்றியிருக்கிறார் ராம்கி. மாடர்னாகவும் லோக்கல் தாதாவாகவும் வந்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். அதுபோல், மீனாட்சியும் கொடுத்த வேலையை செவ்வனே செய்திருக்கிறார்.

வழக்கமான பேய் கதையை எடுத்து அதில் வித்தியாசமான திரைக்கதை அமைக்க முயற்சித்திருக்கிறார் இயக்குனர் குமரேஷ் குமார். பல இடங்களில் திரைக்கதை மந்தமாக செல்கிறது. லாஜிக் மீறல்களை குறைத்திருக்கலாம். கிராபிக்ஸ் காட்சிகள் பெரியதாக கை கொடுக்கவில்லை. கடைசியில் இங்கிலீஷ் படம் என்று தலைப்பு வைத்ததற்கான காரணம் சொல்லுவது ஏற்கும்படியாக இல்லை. அதுபோல் காமெடியும் படத்தில் ஒட்டாமல் இருக்கிறது.

சாய் சதிஷின் ஒளிப்பதிவை ஓரளவிற்கு மட்டுமே ரசிக்க முடிகிறது. எம்.சி.ரிகோ இசையில் ‘இது இங்கிலீஷ் படம்...’ பாடல் தாளம் போட வைத்திருக்கிறது. மற்ற பாடல்கள் கேட்கும் ரகம்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com