யோகி பாபுவின் 300வது திரைப்படம் - நவம்பரில் வெளியாகிறது ‘அர்ஜுனன் பேர் பத்து’!

நவ.27ம் தேதி திரையரங்குகளில் படம் வெளியாகிறது.
யோகி பாபுவின் 300வது திரைப்படம் - நவம்பரில் வெளியாகிறது ‘அர்ஜுனன் பேர் பத்து’!
Published on: 

தேவ் சினிமால் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ரா. ராஜ்மோகன் இயக்கத்தில், யோகி பாபு கதாநாயகனாக நடித்துள்ள ‘அர்ஜுனன் பேர் பத்து’ திரைப்படம் வரும் நவம்பர் 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த ஓர் இளைஞன், தனது வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற நோக்கத்தில் கடினமாக உழைத்து ஒரு வாகனத்தை வாங்குகிறான். ஆனால், அந்த வாகனம் திருடுபோகிறது.

அதனைத் தேடிக் கண்டுபிடிக்கும் முயற்சியில் அவன் இறங்கும்போது, அந்த வாகனத்திற்குப் பலரும் உரிமை கொண்டாடுகின்றனர்.

இதன் பின்னணியில் செயல்படும் வாகனத் திருட்டு மாஃபியா கும்பலை மையமாகக் கொண்டு, உணர்ச்சிகளும், நகைச்சுவையும் கலந்த கமர்ஷியல் திரைப்படமாக உருவாகியுள்ளது.

‘மேற்குத் தொடர்ச்சி மலை’ படத்தின் இயக்குநர் லெனின் பாரதியிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய ராஜ்மோகன், இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

இப்படத்தின்மூலம் அனாமிகா மஹி கதாநாயகியாக அறிமுகமாகிறார். காளி வெங்கட், அருள்தாஸ், அயலி மதன், சுப்ரமணியம் சிவா, மைனா நந்தினி, சௌந்தர்யா, சென்ட்ராயன், ஹலோ கந்தசாமி, பவா லட்சுமண், ரஞ்சன் குமார் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இயக்குநர் லெனின் பாரதியும் இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்திற்கு டி. இமான் இசையமைத்துள்ளார்.

படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில், இறுதிக்கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் வெளியீடு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com