

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் 'ஜெயிலர் 2' திரைப்படத்தின் முதல் பாடலான 'அலா பொலேலோ' இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அக்டோபர் 15-ம் தேதி வெளியாகவுள்ள இத்திரைப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார். அருண்ராஜா காமராஜ் வரிகளில் உருவான இப்பாடலை அனிருத் பாடியுள்ளார். நிரஞ்சனா ராமன், அபர்ணா ஹரிகுமார் மற்றும் தீப்தி சுரேஷ் ஆகியோர் கூடுதல் குரல் கொடுத்துள்ளனர்.
முந்தைய பாகத்தில் தமன்னா ஆடிய 'காவாலா' பாடல் இந்தியா முழுவதும் காட்டுத்தீ போல் பரவி டிரெண்டானது. அதேபோல, தற்போது வெளியாகியுள்ள 'அலா பொலேலோ' பாடல் ஓணம் பண்டிகையை முன்னிலைப்படுத்தி, பாரம்பரிய கேரள பின்னணியில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் நடிகை ஷம்னா காசிம் (பூர்ணா) தனது அதிரடியான நடனத்தால் பாடலைத் தாங்கிப் பிடித்துள்ளார். பாடலின் இறுதியில் ரஜினிகாந்த் மாஸாகத் தோன்றி ரசிகர்களை உற்சாகப்படுத்துகிறார்.
'காவாலா' அளவுக்கு இந்த பாடல் டிரெண்ட் ஆகுமா என்ற எதிர்பார்ப்பு நிலவினாலும், ஷம்னா காசிமின் நடனமும் அனிருத்தின் துள்ளலான இசையும் சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு ஆகியோருடன் எஸ்.ஜே.சூர்யா, வித்யா பாலன், மோகன்லால், சிவராஜ்குமார் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.