‘பில்லா-2’ திரைப்படத்தை இயக்காதது ஏன்? இயக்குநர் விஷ்ணு வர்தன் முதன்முறையாக மனம் திறந்த பேட்டி!

விஷ்ணு வர்தன் விலகியதைத் தொடர்ந்து 'பில்லா-2' திரைப்படத்தை சக்ரி டோலெட்டி இயக்கினார்.
Billa 2
Published on

தமிழ் திரையுலகில் அஜித் குமார் நடிப்பில் வெளியாகி பிரம்மாண்ட வெற்றி பெற்ற 'பில்லா' திரைப்படத்தை இயக்கியதன் மூலம் முன்னணி இயக்குநராக உயர்ந்தவர் விஷ்ணு வர்தன். அதனைத் தொடர்ந்து அஜித்தை வைத்து 'பில்லா-2' திரைப்படத்தை இயக்குவதற்கான பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. அதே காலகட்டத்தில் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான பவன் கல்யாணின் 'பஞ்சா' திரைப்படத்திற்கான படப்பிடிப்பு பணிகளும் தீவிரமடைந்து வந்தன.

இரண்டு பெரிய திரைப்படங்களின் படப்பிடிப்பு தேதிகளும் ஒரே நேரத்தில் அமைந்ததால், ஒரே நேரத்தில் இரு திரைப்படங்களையும் இயக்க முடியாத சூழல் இயக்குநருக்கு ஏற்பட்டது. இதனால் ஏதேனும் ஒரு திரைப்படத்தை மட்டுமே தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார். தொழில்முறை நேர்மை மற்றும் வாக்களித்த கடமையின் அடிப்படையில் பவன் கல்யாணின் 'பஞ்சா' திரைப்படத்திற்கே முதல் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதால், அப்படத்தை இயக்க முடிவு செய்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

அஜித் குமாரின் பெருந்தன்மை

இந்த இக்கட்டான சூழ்நிலை குறித்து நடிகர் அஜித் குமாரிடம் விஷ்ணு வர்தன் நேரில் விளக்கிக் கூறியபோது, அதனை மிகவும் புரிந்துகொண்டு பெருந்தன்மையுடன் ஏற்றுக்கொண்டார். தன்னுடைய சூழ்நிலையை உணர்ந்து அஜித் ஆதரவு அளித்த நிகழ்வை இயக்குநர் விஷ்ணு வர்தன் நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்துள்ளார்.

விஷ்ணு வர்தன் விலகியதைத் தொடர்ந்து 'பில்லா-2' திரைப்படத்தை சக்ரி டோலெட்டி இயக்கினார். இருப்பினும், அஜித் குமாருடன் விஷ்ணு வர்தன் கொண்டிருந்த நல்லுறவின் காரணமாக, பின்னொரு நாளில் அவர்கள் இருவரும் மீண்டும் இணைந்து 'ஆரம்பம்' என்ற பிளாக்பஸ்டர் திரைப்படத்தைக் கொடுத்து ரசிகர்களை மகிழ்வித்தது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com