

பிரபல கிரைம் நாவல் எழுத்தாளர் ராஜேஷ்குமாரின் கதை மற்றும் திரைக்கதையில், இயக்குநர் பி.நித்தியானந்தம் இயக்கியுள்ள உளவியல் கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் திரைப்படமான ‘வயலெட் கனவு’, நாளை முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
அப்பு மூவிஸ் சார்பில் பாபு தூயவன் மற்றும் ஏ.முஸ்தரி ஆகியோர் இப்படத்தைத் தயாரித்துள்ளனர். விவந்த் விவின் கதாநாயகனாகவும், ரெய்னா கரட் கதாநாயகியாகவும் நடித்துள்ள இப்படத்தில், இயக்குநர் ஆர்.அரவிந்தராஜ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ஜெகன் கல்யாண் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஜி.கிதாகரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
நாயகனுக்குத் தொடர்ந்து ஒரே மாதிரியான கனவு வருகிறது. கனவில் நடக்கும் சம்பவங்கள் நிஜத்திலும் நடந்துவிடுமோ என்ற அச்சத்தால் அவர் உளவியல் ரீதியாகப் பாதிக்கப்படுகிறார்.
அவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே நடக்கும் மர்ம சம்பவங்களும், அதன் பின்னணியில் இருப்பது யார் என்ற கேள்விக்குமான விடையை எதிர்பாராத திருப்பங்களுடன் இப்படம் சொல்கிறது.
படத்தின் வெளியீட்டையொட்டி செய்தியாளர்களிடம் பேசிய இயக்குநர் பி.நித்தியானந்தம், "ராஜேஷ்குமார் சாரின் நாவலைப் படிக்கும்போதே சினிமா பார்ப்பது போன்ற உணர்வு இருக்கும். அதனால் கதையில் பெரிய மாற்றங்கள் இன்றி அப்படியே படமாக்கியுள்ளேன். பாடல், ஆக்ஷன் என அனைத்து கமர்ஷியல் அம்சங்களும் கலந்த திரில்லராக இது இருக்கும்" என்றார்.
முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஆர்.அரவிந்தராஜ் பேசுகையில், "சிறிய படங்களுக்குப் போதிய திரையரங்குகளும், சரியான காட்சி நேரங்களும் கிடைப்பதில்லை. பத்திரிகையாளர்களும் ரசிகர்களும் இப்படத்தை ஆதரித்து மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டார்.
இப்படத்தின் நாயகன் விவந்த் விவின் கூறுகையில், "உளவியல் ரீதியாகப் பாதிக்கப்பட்ட கதாபாத்திரத்தில் நடித்தது சவாலான அனுபவமாக இருந்தது" என்றார். நாயகி ரெய்னா கரட் பேசுகையில், "கணவன் - மனைவி இடையிலான உளவியல் சிக்கல்கள் ரசிகர்களைச் சீட் நுனியில் உட்கார வைக்கும்" என நம்பிக்கை தெரிவித்தார்.
ஏற்கனவே வெளியான இப்படத்தின் டிரைலர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், நாளை முதல் ‘வயலெட் கனவு’ திரையரங்குகளில் வெளியாகிறது.