

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் சாய் பல்லவி முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்துள்ள 'இஞ்சி வெல்லம்' திரைப்படத்தின் முதல் பாடலான "ஆச்சி ஆச்சி" லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது.
பிரபல இசை நிறுவனமான சோனி மியூசிக் சவுத் யூடியூப் தளத்தில் இன்று ipadalai வெளியிட்டு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
'தக் லைஃப்' படத்திற்குப் பிறகு மணிரத்னம் – ஏ.ஆர். ரஹ்மான் கூட்டணி மீண்டும் இப்படத்தில் இணைந்துள்ளது. தாய்மை மற்றும் காதலின் அழகிய தருணங்களைக் கொண்டாடும் வகையில் உருவாகியுள்ள இப்பாடலுக்குக் கவிஞர் இளங்கோ கிருஷ்ணன் வரிகள் எழுதியுள்ளார்.
பாடகிகள் வைஷாலி சமந்த் மற்றும் சரண்யா ஸ்ரீனிவாஸ் ஆகியோர் இப்பாடலைப் பாடியுள்ள நிலையில், கதீஜா ரஹ்மான் உள்ளிட்ட பலர் பின்னணிக் குரல் கொடுத்துள்ளனர். கமலாகரின் புல்லாங்குழல் இசையும், ரஹ்மானின் துள்ளலான பின்னணியும் பாடலுக்குப் பெரும் பலம் சேர்த்துள்ளன.
'செக்கச் சிவந்த வானம்' படத்திற்குப் பிறகு மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் இரண்டாவது திரைப்படம் இதுவாகும். கொல்கத்தாவின் ஹவுரா பாலம் உள்ளிட்ட முக்கியப் பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ள இப்படம், காதல் மற்றும் குடும்ப உறவுகளின் உணர்வுபூர்வமான பயணத்தை விவரிக்கும் படைப்பாக உருவாகியுள்ளது.
இதில் சைத்ரா ஜே. ஆச்சார் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் வழங்க, மெட்ராஸ் டாக்கீஸ் சார்பில் மணிரத்னம் மற்றும் சிவா ஆனந்த் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளனர். தொழில்நுட்ப ரீதியாகப் பல முன்னணி கலைஞர்கள் பணியாற்றியுள்ள இப்படத்திற்கு அவிக் முகோபாத்யாய் ஒளிப்பதிவு செய்ய, ஏ. ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பைக் கவனித்துள்ளார். மேலும், ஷர்மிஷ்டா ராய் கலை இயக்கத்தையும், பிருந்தா நடன இயக்கத்தையும், திலீப் சுப்பராயன் சண்டைப் பயிற்சியையும் மேற்கொண்டுள்ளனர்.
மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் உருவாகியுள்ள 'இஞ்சி வெல்லம்' திரைப்படம், வரும் 2027-ம் ஆண்டு ஜனவரி மாதம் 29-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.