இயக்குநராக அறிமுகமாகும் ஒளிப்பதிவாளர் விஜய் ஆம்ஸ்ட்ராங்: சர்வதேச விருதுகளைக் குவிக்கும் ‘வன மடி’!

சர்வதேச திரைப்பட விழாக்களில் 4 விருதுகளை வென்றுள்ள ‘வன மடி’ திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
Vijay Armstrong - Vana Madi
Published on: 
Summary

தமிழ் சினிமாவில் ‘மாத்தி யோசி’, ‘தொட்டால் தொடரும்’, ‘அழகு குட்டி செல்லம்’, ‘புகைப்படம்’ உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய விஜய் ஆம்ஸ்ட்ராங், தற்போது ‘வன மடி’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

சென்டர் சீட் சினிமாஸ் சார்பில் விஜயராகவன் தயாரிக்கும் இப்படத்தை ஞானம் சுப்பரமணியன் நிர்வாக மேற்பார்வை செய்துள்ளார்.

படத்தின் கதைக்கரு மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள்

இயந்திரத்தனமான இன்றைய வாழ்க்கை முறைக்குள் இயல்பான மனிதர்களின் அன்பும், தேடுதலும் எவ்வாறு ஒளிந்துகொண்டுவிட்டன என்பதைத் தனது எளிய மொழியில் விஜய் ஆம்ஸ்ட்ராங் இப்படத்தில் காட்சிப்படுத்தியுள்ளார்.

முற்றிலும் புதியவர்கள் நடித்துள்ள இப்படத்திற்குக் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குவதுடன், ஒளிப்பதிவையும் விஜய் ஆம்ஸ்ட்ராங்கே மேற்கொண்டுள்ளார். ராலே ராஜன் இசையமைத்துள்ள இப்படத்தில், பிரபல பாடகி மால்குடி சுபா ஒரு பாடலைப் பாடியுள்ளார்.

சர்வதேச திரைப்பட விழாக்களில் சாதனை

முழுமையாகத் தயாராகியுள்ள ‘வன மடி’ திரைப்படம், உலகம் முழுவதும் உள்ள சுமார் 35 சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதில் 7 சர்வதேச திரைப்பட விழாக்களில் அதிகாரப்பூர்வமாகத் தேர்வான இப்படம், அவற்றில் 4 திரைப்பட விழாக்களில் வெவ்வேறு பிரிவுகளில் விருதுகளையும் வென்று சாதனை படைத்துள்ளது.

இயக்குநர் விஜய் ஆம்ஸ்ட்ராங் நெகிழ்ச்சி

படம் குறித்து இயக்குநர் விஜய் ஆம்ஸ்ட்ராங் கூறுகையில், “இப்படம் இயற்கை சம்பந்தப்பட்டது. ‘தாய் மடி’ என்பது போல ‘வன மடி’ என்ற பெயரை வைத்துள்ளோம். இந்தப் படம் எதிர்காலத் தலைமுறைக்கான படம் மட்டுமல்ல, குறிப்பாக அனைத்துப் பெற்றோர்களுக்குமான படமும் கூட.

சர்வதேச திரைப்பட விழாக்களில் இப்படம் முக்கிய கவனம் பெற்று வருவது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. ‘வன மடி’ விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

X