

நடிகர் அருள்நிதி மற்றும் இயக்குநர் அமீர் நடிப்பில் உருவாகி வரும் 'வேட்ட சாமி' திரைப்படத்தின் 'வீரரை போற்று' லிரிக்கல் வீடியோ பாடல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக்களங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகர் அருள்நிதி மற்றும் இயக்குநர் அமீர் இணைந்து நடித்துள்ள திரைப்படம் 'வேட்ட சாமி'.
எம். செல்வகுமார் எழுதி இயக்கியுள்ள இப்படத்தை '7 மைல்ஸ் பெர் செகண்ட் புரொடக்ஷன்ஸ்' சார்பில் சாமுவேல் மேத்யூ தயாரித்துள்ளார்.
இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ள நிலையில், படத்தின் முக்கியப் பாடலான 'வீரரை போற்று' லிரிக்கல் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
பாடலாசிரியர் எம். ஜெகன் கவிராஜ் எழுதியுள்ள இப்பாடலைப் பிரபல நாட்டுப்புறப் பாடகர் புஷ்பவனம் குப்புசாமி தனது கம்பீரமான குரலில் பாடியுள்ளார். இப்படம் அடுத்த மாதம் வெளியாகவுள்ளது விரைவில் தேதி வெளியிடப்படும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.
கதையின் நாயகனான 'பூதப்பாண்டி' என்ற கதாபாத்திரத்தின் வீரம், மக்களுக்கான தியாகம் மற்றும் மண்ணின் மீதான பற்றைப் போற்றும் வகையில் இப்பாடல் வரிகள் அமைந்துள்ளன.
குறிப்பாக, "பூதப்பாண்டி சிங்கம் அவர் புன்னகைதான் தங்கம்", "அன்பு செஞ்சா தங்கம் அவர் சீறி வந்தா சிங்கம்" போன்ற வரிகள் கதாபாத்திரத்தின் ஆளுமையைச் சிறப்பாக வெளிப்படுத்துகின்றன.
ஆர்.டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ரூபன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார்.
கிராமத்துப் பின்னணியில், மண்ணின் வீரத்தையும் கலாச்சாரத்தையும் மையமாகக் கொண்டு உருவாகியுள்ள 'வேட்ட சாமி' திரைப்படத்தின் மீது இப்பாடல் வெளியீட்டிற்குப் பிறகு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.