600-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த மூத்த தெலுங்கு நடிகர் கிரி பாபு மறைவு

மகேஷ் பாபுவின் 'அதடு' திரைப்படத்தில் கதாநாயகியின் தந்தையாக அவர் நடித்த பாத்திரம் குறிப்பாக பிரபலமானது.
கிரி பாபு
Published on: 
Summary

மூத்த தெலுங்கு நடிகர் கிரிபாபு காலமானார்.

தெலுங்கு திரையுலகில் புகழ்பெற்ற மூத்த நடிகர் கிரிபாபு (80) காலமானார்.

சில காலமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவர், ஐதராபாத், கொண்டாபூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிர் நீத்தார்.

அவரது மரணம் டோலிவுட் திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிரிபாபுவின் முழுப்பெயர் யர்ரா சேஷகிரி ராவ். அவர் ஜூன் 8, 1946 அன்று பிரகாசம் மாவட்டம், ரவினுதலாவில் பிறந்தார்.

ஆரம்பகால வாழ்க்கை

சிறுவயதிலிருந்தே நாடகங்கள் மற்றும் கலைகளில் கொண்டிருந்த ஆர்வத்தின் காரணமாக அவர் திரையுலகில் அடியெடுத்து வைத்தார். 1973ல் வெளியான 'ஜகமே மாயா' திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.

ஆரம்பத்தில் சில படங்களில் கதாநாயகனாக நடித்திருந்தாலும், பின்னர் வில்லன், நகைச்சுவை நடிகர் மற்றும் குணச்சித்திரக் கலைஞராக மாறி, தனது தனித்துவமான பாணியால் ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார்.

திரை வாழ்க்கை

40 ஆண்டுகளுக்கும் மேலான தனது திரையுலக வாழ்க்கையில் கிரிபாபு 600க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அனைத்து முன்னணி கதாநாயகர்களுடனும் நடித்த அனுபவம் அவருக்கு உண்டு.

மகேஷ் பாபுவின் 'அதடு' திரைப்படத்தில் கதாநாயகியின் தந்தையாக அவர் நடித்த பாத்திரம் குறிப்பாக பிரபலமானது.

கம்யம், ஆ ஆ, கீதா கோவிந்தம், டிஸ்கோ ராஜா, மோஸ்ட் எலிஜிபிள் பேச்சிலர், ஜாதி ரத்னாலு போன்ற படங்களிலும் நடித்து அவர் பார்வையாளர்களை கவர்ந்தார்.

இயக்குநர் - தயாரிப்பாளர்

கிரிபாபு, 'ரணரங்கம்' (1985), 'இந்திரஜித்' (1990), மற்றும் 'நீ சுகமே நீ கோருண்யண்ணா' (2008) போன்ற படங்களை இயக்கியும் உள்ளார். மேலும் பல படங்களையும் அவர் தயாரித்துள்ளார்.

கிரிபாபுவுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அவரது மூத்த மகன் ரகுபாபு நகைச்சுவை நடிகர் ஆவார்.

கிரிபாபுவின் மறைவுக்கு திரையுலகப் பிரபலங்களும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

X