மூத்த நடிகை வத்சலா ராஜகோபால் காலமானார்

வத்சலா ராஜகோபாலின் மறைவுக்குத் தமிழ் திரையுலகினரும், ரசிகர்களும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
மூத்த நடிகை வத்சலா ராஜகோபால்
Published on: 
Summary

மூத்த நடிகை வத்சலா ராஜகோபால் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 93.

திரைப்படம், நாடகம் மற்றும் சின்னத்திரை என பல்வேறு துறைகளில் தனக்கெனத் தனி முத்திரை பதித்த மூத்த நடிகை வத்சலா ராஜகோபால் (93) வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் இன்று காலமானார்.

சென்னையை அடுத்த பல்லாவரத்தில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது.

திருவனந்தபுரத்தில் பிறந்து வளர்ந்த வத்சலா, பள்ளிப் பருவத்திலேயே நடனம் மற்றும் நாடகத்தின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். 1953-ஆம் ஆண்டு திருமணத்திற்குப் பிறகு சென்னைக்குக் குடிபெயர்ந்த அவர், தலைமை கணக்குத் தணிக்கையாளர் அலுவலகத்தில் எழுத்தராகப் பணியாற்றினார். அப்போது அதே அலுவலகத்தில் இயக்குநர் ஆவதற்கு முன் மூத்த அதிகாரியாகப் பணியாற்றி வந்த கே.பாலசந்தருடன் இவருக்கு அறிமுகம் கிடைத்தது. பின்னர், கார்ட்டூனிஸ்ட் ஸ்ரீதரன் நடத்தி வந்த 'ரசிக ரங்கா' நாடகக் குழுவில் இணைந்து மேடை நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார்.

400-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள்

மேடை நாடகங்களில் இவரது சிறப்பான நடிப்பைக் கண்ட இயக்குநர் மணிரத்னம், தனது 'ரோஜா' படத்தில் இவருக்கு வாய்ப்பளித்தார். இதன் மூலம் தனது 60-வது வயதில் திரையுலகில் அறிமுகமான வத்சலா, அப்படத்தில் நடிகை மதுபாலாவின் பாட்டியாக நடித்துப் பலரின் கவனத்தையும் ஈர்த்தார்.

அதன்பின்னர் 'ஜென்டில்மேன்', 'சதி லீலாவதி' , 'அன்னியன்', 'மொழி', 'ரிதம்', 'வின்னர்', 'பட்டியல்', 'தாம் தூம்', 'கல்யாண சமையல் சாதம்' உட்பட 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தார். பெரும்பாலும் பாசமிக்க, நகைச்சுவை உணர்வுமிக்க பாட்டி கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.

திரைப்படம் மட்டுமின்றி சின்னத்திரையிலும் முன்னணி நடிகையாக விளங்கிய வத்சலா, 'சித்தி', 'ஆனந்தம்', 'முந்தானை முடிச்சு', 'வசந்தம்' போன்ற புகழ்பெற்ற தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். மேலும், இயக்குநர் பாலுமகேந்திராவின் 'கதை நேரம்' தொடரிலும் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

நாடகம், சின்னத்திரை, வெள்ளித்திரை என மூன்று தளங்களிலும் பல தலைமுறை ரசிகர்களைக் கவர்ந்த வத்சலா ராஜகோபாலின் மறைவுக்குத் தமிழ் திரையுலகினரும், ரசிகர்களும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

X