

தமிழில் நடிகர் வடிவேலுவுடன் இணைந்து பல திரைப்படங்களில் நடித்த நகைச்சுவை நடிகர் டெலிபோன் ராஜ், தான் இருநூறு படங்களுக்கு மேல் நடித்தும் தனக்கு இன்னும் உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என கூறியுள்ளார்.
தமிழில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான குருக்ஷேத்ரம் திரைப்படத்தில், சத்யராஜ், வடிவேலு ஆகியோருடன் இணைந்து நகைச்சுவை நடிகர் டெலிபோன் ராஜ் காமெடி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
அந்த படத்தில் வரும் ஒரு நகைச்சுவை காட்சியில், ஹோட்டலுக்கு சாப்பிட வரும் வடிவேலு, தனக்கு ஒரு மொறு மொறு நெய் பொடி தோசை வேண்டும் என ஹோட்டல் சர்வர் டெலிபோன் ராஜ்-இடம் கூறுவார்.
அப்போது வடிவேல் சொல்வதையெல்லாம் பொறுமையாக கேட்டுவிட்டு, அண்ணனுக்கு ஒரு ஊத்தாப்பம் என சிம்பிளாக சொல்லிவிட்டு செல்லும் காட்சி, ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றது.
மேலும் அந்த காட்சி மீம்களாக தற்போதும் நெட்டிசன்களால் பல வாழ்க்கை சம்பவங்களில் தொடர்புபடுத்தி பகிரப்பட்டு வருகிறது.
இதையடுத்து நகைச்சுவை நடிகர் டெலிபோன் ராஜ், தனது சினிமா அனுபவங்கள் குறித்து மாலைமலர் செய்தி நிறுவனத்திற்கு பிரத்யேக பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
அவர் அளித்த பேட்டியில்,
நான் நாகர்கோவிலில் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே, மனோகரா மற்றும் பராசக்தி போன்ற வசன புத்தகங்களை வாங்கி வந்து படிப்பேன்.
கன்னியாகுமரிக்கு அடுத்த பால்குளத்தில், சிவாஜி கணேசன் வேடத்தில் நான் மேடை நாடகம் நடித்தேன்.
நான் எனது 11ம் வகுப்பை 1978ஆம் ஆண்டு முடித்ததற்கு பிறகு, சென்னை வந்தேன். அங்கு எனக்கு தேவையான ஒரு சின்ன டிரங்க் பெட்டி, தட்டு மற்றும் பேண்டு, ஷர்டுகள் வாங்கி கொண்டேன்.
எனக்கு சென்னையில் அவ்வளவாக யாரையும் தெரியாத காரணத்தால், நான் எனது ஆரம்பகாலத்தில் பாரதிராஜா, பாக்யராஜ் மற்றும் பாலசந்தர் உள்ளிட்ட இயக்குநர்களிடம் வாய்ப்பு கேட்டு சென்றேன்.
எனக்கு சினிமா வாய்ப்பு எளிதில் கிடைக்கவில்லை, அதுவரைக்கும் எனது சாப்பாடு மற்றும் ரூம் வாடகைக்காக, லேத் வொர்க்ஷாப்பில் கிளீனிங் வேலை செய்து வந்தேன்.
சூளைமேட்டிற்கு அருகில் உள்ள ஒரு புத்தக சாலையில், சம்பளம் இல்லாமல் உணவிற்காக மட்டும் வேலை செய்தேன்.
பாரீஸில் உள்ள பி.எஸ்.என்.எல் டெலிபோன் எக்ஷேஞ்ச் கேண்டீனுக்கு, 1979 ஆம் ஆண்டு முத்துராஜ் என்பவர் என்னை அழைத்து சென்றார்.
அங்கு நான் பாத்திரங்களை கழுவுவது, காய்கறிகளை வெட்டுவது, சமைப்பது, பார்சல் செய்வது உள்ளிட்ட வேலைகளை செய்து வந்தேன்.
எனக்கு கேண்டீனில் ஒரு நாளைக்கு நான்கு ரூபாய் சம்பளம் கொடுத்தார்கள்; பின்நாளில் கங்கை அம்மன் கோவில் தெருவில் 50 ரூபாய் வாடகைக்கு ரூம் ஒன்றை எடுத்து, எனது பெற்றொர்களை அழைத்து வந்தேன்.
நான் எனது கேண்டீன் நண்பருடன் இணைந்து மேடை நாடகம் ஒன்றில் நடித்தேன். அந்த நாடகம் என்னை சினிமாவிற்குள் அழைத்து சென்றது.
நான் வடிவேலுவுடன் இணைந்து பகவதி படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தபோது, முதலில் வடிவேலு தயங்கினார். அதன் பின், பல படங்களில் அவருடன் இணைந்து நான் நடித்தேன்.
வடிவேலுவுடன் இணைந்து ஊத்தாப்பம் காமெடியில் நடித்த காட்சி பெரும் வரவேற்பை பெற்றது.
இயக்குநர் மணிரத்னம் இயக்கிய கடல் படத்தில் நான் நடித்தபோது, என்னை இயக்குநர் வெகுவாக பாராட்டினார்.
நான் திரைப்படங்களை தவிர, சுமார் 2000க்கும் மேற்பட்ட மேடை நாடகங்களில் நடித்துள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.