

தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் அட்டக்கத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, சுவாசிகா, உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 2024ம் ஆண்டு வெளியான பொழுதுபோக்கு திரைப்படம் லப்பர் பந்து.
ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற இப்படம், பலதரப்பிலிருந்தும் பாராட்டுகளை குவித்தது. இன்றுடன் இப்படம் வெளியாகி இரண்டு ஆண்டுகள் நிறைவடைகின்றன.
இந்நிலையில் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகர் ஹரிஷ் கல்யாண், படம் தொடர்பாக சமூக வலைதளப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது;
“சில படங்கள் வெறும் படைப்புகளாக மட்டுமே இருக்கும்... ஆனால் சில படங்கள் நம் வாழ்வின் ஒரு பகுதியாகவே மாறிவிடும்.
இந்தப் படம் எனக்கு அப்படித்தான் அமைந்தது. இந்தப் பயணத்தைத் தொடங்கிய முதல் நாள் முதல் இன்று வரை, உங்கள் அன்பு அளப்பரியதாக இருந்தது.
நாங்கள் கற்பனை செய்ததை விடவும் மேலாக, இந்தப் படத்திற்கு நீங்கள் ஒரு புதிய வாழ்வை அளித்துள்ளீர்கள். இதயத்தின் ஆழத்தில் இருந்து நன்றிக் கூறுகிறேன். இந்த அன்பை எப்போதும் எடுத்துச் செல்வேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.