

டைகர் ஷெராப் மீதான தாக்குதலுக்கு கரணம் அவர் சல்மான் கானை புகழ்ந்ததே என தெரியவந்துள்ளது.
பாலிவுட் நடிகர் டைகர் ஷெராபை குறிவைத்து கடந்த அக்டோபர் 18 அன்று துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தப்பட்டது.
அன்றைய தினம் மும்பையின் ஜூஹு பகுதியில் கால்பந்து விளையாடிவிட்டு காரில் சென்றுகொண்டிருந்த டைகரின் பிஎம்டபிள்யூ காரை நோக்கி 3 மர்ம நபர்கள் ஏழு முறை சுட்டுவிட்டு, பைக்கில் தப்பிச் சென்றனர்.
இந்தச் சம்பவத்தில் டைகரின் ஓட்டுநரும், ஒரு பாதசாரியும் காயமடைந்தனர். டைகர் காயமின்றி தப்பித்தார்.
இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, லாரன்ஸ் பிஷ்னோயின் கும்பலுடன் தொடர்புடைய ஒருவர், இந்த தாக்குதலுக்குப் பொறுப்பேற்று ஒரு ஆடியோ செய்தியை வெளியிட்டார்.
இந்நிலையில் ராஜஸ்தானின் கோட்டா ரெயில் நிலையத்தில், தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் மூன்று பேரையும் காவல்துறை ரெயிலில் வைத்து கைது செய்தது. அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அவர்களில் ஒருவன், நடிகர் டைகர் ஷெராப் மீது ஏன் தாக்குதல் நடத்தினோம் என்பதற்கான காரணத்தை தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
அந்த நபர், கடந்த 2022 இல் டைகர் ஷெராப் தொலைகாட்சி நிகழ்ச்சியில் சல்மான் கானை புகழ்ந்ததே அவர் மீது தாக்குதல் நடத்த காரணம் என அந்த நபர் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
2022ஆம் ஆண்டு தனது 'ஹீரோபந்தி 2' திரைப்படத்தின் விளம்பர பணிகளில் டைகர் ஷெராப் ஈடுபட்டிருந்தார்.
அப்போது அவர் ஒரு பேட்டியில், "இந்தத் துறையில் ஒரே ஒரு டைகர் தான் இருக்கிறார். அவர் சல்மான் சார். அவருக்கு முன்னால், நான் ஒரு பூனை போல. நான் சிம்பா... ஒரு புலிக்குட்டி" என்று கூறினார்.
இந்தக் கருத்துக்கள் அந்த நேரத்தில் சமூக ஊடகங்களில் வைரலாகின.
இந்நிலையில் காவல்துறை வட்டாரங்களை மேற்கோள் காட்டி, இந்தக் கருத்துக்களும் தற்போது நடந்த தாக்குதலுக்கான காரணங்களில் ஒன்றாக இருந்தது என்று குற்றவாளி விசாரணையின் போது கூறியதாக தேசிய ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
1998 அக்டோபர் மாதத்தில் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் 'ஹம் சாத் சாத் ஹைன்' திரைப்படத்தின் படப்பிடிப்பில் இருந்தபோது சல்மான் கான் கருப்பு மானை (Blackbuck) வேட்டையாடி சர்ச்சையில் சிக்கினார்.
பிளாக்பக் வகை மான் பிஷ்னோய் சமூகத்தால் புனித விலங்காக பார்க்கப்படுகிறது. எனவே சல்மான் கானை கொலை செய்ய பிரபல கும்பல் தலைவனான லாரன்ஸ் பிஷ்னோயின் கும்பல் முயற்சி செய்து வருகிறது.
மேலும் அவருடன் தொடர்புடையவர்களையும் குறிவைத்து வருகிறது. முன்னதாக சல்மான் கானுக்கு நெருக்கமான தேசியவாத காங்கிரஸ் தலைவர் பாபா சித்திக் கடந்த 2024 இல் இந்த கும்பலால் சுட்டுக் கொல்லப்பட்டார்.