எம்ஜிஆர் பயோபிக்- ஜெயலலிதா ரோலில் திரிஷா?

எம்ஜிஆரின் கதாபாத்திரத்தில் நடிகர் ஜே.எம். பஷீர் நடிக்கவுள்ளார்.
Jayalalithaa-Trisha
Published on: 

மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சரும், இந்திய திரையுலகின் ஜாம்பவானுமான எம்ஜிஆர் வாழ்க்கையை மையமாகக் கொண்டு புதிய பயோபிக் ஒன்று தயாராகி வருகிறது. 'புரட்சி தலைவர் எம்ஜிஆர்' என பெயரிடப்பட்டுள்ள இந்த பிரம்மாண்ட திரைப்படத்தில், எம்ஜிஆரின் கதாபாத்திரத்தில் நடிகர் ஜே.எம். பஷீர் நடிக்கவுள்ளார். எம்ஜிஆரின் சினிமா பயணம் மற்றும் அரசியல் எழுச்சி உள்ளிட்ட பல முக்கிய கட்டங்களை இந்த படம் விவரிக்கவுள்ளது.

இந்த திரைப்படத்தில் தமிழகத்தின் மற்றொரு வலிமையான முதலமைச்சரான மறைந்த ஜெயலலிதாவின் கதாபாத்திரம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. அந்தப் பாத்திரத்தில் நடிக்க தமிழ் சினிமாவின் முன்னணி நாயகியான திரிஷாவை படக்குழுவினர் அணுகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. திரிஷா இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பாத்திரத்தில் நடித்தால் அது படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கும் என்று படக்குழு கருதுகிறது.

இன்னும் உறுதியாகாத திரிஷாவின் சம்மதம்

ஜெயலலிதா ரோலில் திரிஷா நடிக்கக்கூடும் என்ற இந்த செய்தி தற்போது கோலிவுட் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், இந்தத் தகவல்கள் குறித்து திரிஷா தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமான சம்மதம் எதுவும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை. அவரது ஒப்புதலுக்காகப் பேச்சுவார்த்தைகள் தொடர்வதால், இறுதி முடிவு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

எம்ஜிஆர் பயோபிக் என்பதால், அன்றைய காலத்து அரசியல் சூழலை ஒட்டி சி.என்.அண்ணாதுரை மற்றும் மு.கருணாநிதி போன்ற முக்கிய அரசியல் தலைவர்களின் கதாபாத்திரங்களும் இப்படத்தில் இடம்பெறுகின்றன. சென்னை ராமபுரத்தில் படப்பிடிப்பு தொடங்க திட்டமிடப்பட்டு, இதர நடிகர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் தேர்வு குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com