

'தி டார்க் ஹெவன்' திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, அதே கூட்டணியில் உருவாகும் 'தி லாஸ்ட் கேஸ்' திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ பூஜை இன்று கோலாகலமாக நடைபெற்றது.
அண்மையில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற கிரைம் திரில்லர் திரைப்படம் 'தி டார்க் ஹெவன்'.
பிக்பாஸ் புகழ்பெற்ற சித்து மற்றும் தர்ஷிகா நடிப்பில், இயக்குநர் பாலாஜி இயக்கியிருந்த இப்படம் திரையரங்குகளைத் தொடர்ந்து ஓடிடியிலும் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்த கூட்டணியின் அடுத்த அதிரடி முயற்சியாக, 'தி லாஸ்ட் கேஸ்' (The Last Case) என்ற புதிய திரைப்படத்தின் தொடக்க விழா மற்றும் பூஜை இன்று சென்னை பிரசாத் லேப் பிள்ளையார் கோவிலில் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் விமரிசையாக நடைபெற்றது.
Dream 7 Cinemas தயாரிக்கும் இத்திரைப்படத்தின் போஸ்டர்கள் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளன. 'ஒவ்வொரு குற்றமும் ஏதாவது ஒரு தடயத்தை விட்டுச் செல்லும்.
அது குற்றவியல் சம்பந்தமான ஒரு கோட்பாட்டைத் திருத்தி எழுதும்' என்ற விறுவிறுப்பான கருத்தை மையமாகக் கொண்டு, உண்மைச் சம்பவங்களின் பின்னணியில் ஒரு மலைப்பிரதேசத்தில் நடக்கும் புலனாய்வு கதையாக இப்படம் உருவாகவுள்ளது.
நிகழ்வில் பேசிய இயக்குநர் பாலாஜி, "முந்தைய படத்தில் பணியாற்றிய அதே தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் சித்து, தர்ஷிகா, ஜெயக்குமார் ஆகியோரே இதிலும் தொடர்கிறார்கள். ஆனால், 'தி டார்க் ஹெவன்' போல் இருக்குமோ என்ற எண்ணத்தை உடைக்கும் வகையில் முற்றிலும் மாறுபட்ட கதையாக இது இருக்கும்.
அதில் பேண்டஸி கலந்திருக்கும், இதில் அது இருக்காது. மாறாக, கதாபாத்திரங்களின் ஆழமான உணர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. நிலவியல் காட்சிகள் படத்திற்கு வேறுவிதமான அனுபவத்தைத் தரும்" என்றார்.
இப்படத்தின் கதாநாயகன் சித்து பேசுகையில், "நான் பல தொலைக்காட்சித் தொடர்களில் நடித்திருந்தாலும், எனது சினிமா பயணத்தில் பெரிய அடையாளத்தைக் கொடுத்தது 'தி டார்க் ஹெவன்' படத்தின் பாரி கதாபாத்திரம் தான்.
மக்கள் இப்போது என்னை 'பாரி பாரி' என்று அழைப்பது மகிழ்ச்சியாக உள்ளது. அந்த வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் இயக்குநர் பாலாஜி அண்ணன் எனக்கு இந்த வாய்ப்பை வழங்கியுள்ளார். இப்படம் அந்த வெற்றி வரிசையில் அமையும்" என நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
தர்ஷிகா பேசுகையில், "முந்தைய படத்தின் வெளியீட்டு விழா நேற்று நடந்தது போல் இருக்கிறது, அதற்குள் அடுத்த படம் தொடங்குவதை நம்பவே முடியவில்லை. முந்தைய படத்தை விட இதில் எனக்கு மிகவும் மாறுபட்ட, கதாபாத்திரம் கிடைத்துள்ளது" என்றார்.
இந்தத் தொடக்க விழாவில் குணச்சித்திர நடிகர் ஜெயக்குமார், தயாரிப்பாளர்கள் கோபால், சரண், இசையமைப்பாளர் சக்தி பாலாஜி மற்றும் படக்குழுவினர் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.