ஜீவா நடிக்கும் 'தகப்பன்' திரைப்படத்திற்கு 'U/A 13+' தணிக்கைச் சான்றிதழ்!

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது.
Thagappan  -  Censor certificate
Published on: 
Summary

'கிடா' திரைப்படத்தின் மூலம் விமர்சன ரீதியாகப் பெரும் வரவேற்பைப் பெற்ற இயக்குநர் ரா. வெங்கட் எழுதி, இயக்கியுள்ள 'தகப்பன்' திரைப்படத்திற்கு மத்திய திரைப்படத் தணிக்கை வாரியம் 'U/A 13+' சான்றிதழ் வழங்கியுள்ளது.

நடிகர் ஜீவா கதாநாயகனாக நடித்துள்ள இப்படம், கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வரும் டிசம்பர் 24-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

தந்தை - மகன் பாசமும் கதைக்களமும்

மதுரையைப் பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம், ஒரு தந்தைக்கும் மகனுக்கும் இடையிலான ஆழமான அன்பு, தியாகம் மற்றும் குடும்ப உறவுகளின் உன்னதத்தை உணர்வுபூர்வமாகப் பேசுகிறது.

இப்படத்தில் ஜீவா லாரி ஓட்டுநராகவும், அவருக்கு ஜோடியாக மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகை ரஜிஷா விஜயன் அவரது மனைவியாகவும் நடித்துள்ளனர். இவர்களுடன் மாஸ்டர் கேசவ், லக்ஷ்மி ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

படத்தின் கால அளவு மற்றும் பாடல்கள்

லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் கே. குமார் தயாரித்துள்ள இப்படத்திற்கு மார்ஷல் ராபின்சன் இசையமைத்துள்ளார். ஏற்கனவே இப்படத்திலிருந்து வெளியான 'தங்கப்புள்ள' மற்றும் 'சொக்க வச்சாளே' ஆகிய இரண்டு பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.

இந்நிலையில், தணிக்கைக் குழு இப்படத்திற்கு 'U/A 13+' சான்றிதழ் அளித்துள்ள நிலையில், படத்தின் மொத்த கால அளவு 2 மணி நேரம் 10 நிமிடங்கள் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொழில்நுட்பக் கலைஞர்கள் விவரம்

கடந்த ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பு நிறைவடைந்த இப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இப்படத்திற்கு எம். சுகுமார் ஒளிப்பதிவு செய்ய, நாகூரான் ராமச்சந்திரன் படத்தொகுப்பைக் கவனித்துள்ளார்.

மேலும், கே.பி. நந்தபாலன் கலை இயக்கத்தையும், மகேஷ் மேத்யூ சண்டைப் பயிற்சியையும், ரித்தேஷ் செல்வராஜ் ஆடை வடிவமைப்பையும் மேற்கொண்டுள்ளனர்.

தணிக்கைச் சான்றிதழ் அறிவிப்புடன் படக்குழு வெளியிட்டுள்ள புதிய போஸ்டரில், ஜீவாவும் சிறுவனும் பைக்கில் மகிழ்ச்சியுடன் பயணிக்கும் காட்சி இடம்பெற்று ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்தப் போஸ்டரைப் பகிர்ந்துள்ள நடிகர் ஜீவா, "உண்மையான உணர்வுகள் நிறைந்த 'தகப்பன்' திரைப்படத்திற்கு U/A சான்றிதழ் கிடைத்துள்ளது" என உற்சாகத்துடன் பதிவிட்டுள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது.

X