

சென்னையில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் அவசரக் கலந்துரையாடல் கூட்டம் சங்கத்தின் தலைவர் திரு. ஜி.கே.எம். தமிழ்க்குமரன் அவர்கள் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இக்கூட்டத்தில் சங்கத்தின் எதிர்கால வளர்ச்சி மற்றும் தமிழ் சினிமா தயாரிப்பாளர்களின் நலன் குறித்துப் பல்வேறு ஆக்கப்பூர்வமான முடிவுகள் எடுக்கப்பட்டன.
குறிப்பாக, தமிழ் சினிமாத்துறையின் நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்றிய தமிழக அரசுக்கு இக்கூட்டத்தில் ஒருமனதாகப் பாராட்டுக்களும் நன்றிகளும் தெரிவிக்கப்பட்டன.
பண்டிகைக் காலங்களில் வெளியாகும் பெரிய பட்ஜெட் மற்றும் புதிய திரைப்படங்களுக்குத் திரையரங்குகளில் ஒரு வாரத்திற்குத் தினசரி 6 காட்சிகள் திரையிட அனுமதி வழங்கி அரசாணை வெளியிட்டமைக்காக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களுக்குத் தயாரிப்பாளர்கள் சங்கம் தங்களது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டது.
கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் 2022-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் தயாரிப்பாளர்களுக்குப் பல வருடங்களாக நிலுவையில் வைக்கப்பட்டிருந்த அரசு மானியத் தொகையை உடனடியாக ரிலீஸ் செய்து வழங்கியதற்கும் முதலமைச்சருக்குப் பாராட்டுக்கள் குவிந்தன.
தயாரிப்பாளர்களின் இந்தக் கோரிக்கைகளை முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு சென்று, அரசாணை உடனடியாக வெளிவர உறுதுணையாக இருந்த மாண்புமிகு செய்தித்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அவர்களுக்கும் இக்கூட்டத்தில் பிரத்யேகமாக நன்றித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இக்கூட்டத்தில் சங்கத்தின் உயர்நிலைக் குழு உறுப்பினர்களான முன்னாள் தலைவர்கள் எஸ்.ஏ. சந்திரசேகரன், கேயார், கலைப்புலி எஸ். தாணு, டி.ஜி. தியாகராஜன் ஆகியோர் பங்கேற்றனர். மேலும் முன்னாள் செயலாளர்கள் ஏ.எல். அழகப்பன், டி. சிவா, பெப்சி தலைவர் ஆர்.கே. செல்வமணி, தயாரிப்பாளர் ஐசரி கே. கணேஷ், திருமதி கமிலா நாசர் மற்றும் சங்கத்தின் தற்போதைய செயலாளர் ஆர். ராதாகிருஷ்ணன், பொருளாளர் சுபாஷ் சந்திரபோஸ் உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்கள் என ஒட்டுமொத்த கோலிவுட்டின் முக்கியப் பிரதிநிதிகளும் இதில் கலந்துகொண்டனர்.
தமிழக அரசின் இந்த அதிரடி அறிவிப்புகள் தியேட்டர் உரிமையாளர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் சந்தித்து வந்த பொருளாதார நெருக்கடியை முழுமையாக நீக்கி, தமிழ் சினிமாவின் வர்த்தகத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என சினிமா வர்த்தக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.