அகில உலக சூப்பர்ஸ்டார் இனி 'Intergalactic சூப்பர்ஸ்டார்': பூஜையுடன் தொடங்கிய 'தமிழ்ப் படம் 3' படப்பிடிப்பு!

8 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வந்த காம்போ ரசிகர்களுக்கு சிறந்த நகைச்சுவை விருந்து தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Tamizh Padam 3
Published on: 
Summary

தமிழ் சினிமாவில் முற்றிலும் புதிய பாணியான ஸ்பூஃப் திரைப்படங்களை அறிமுகப்படுத்தி பிளாக்பஸ்டர் வெற்றி கண்ட இயக்குநர் சி.எஸ். அமுதன் மற்றும் மிர்ச்சி சிவா கூட்டணியின் அடுத்த அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இவர்களது கூட்டணியில் உருவாகும் திரையுலகின் டாப் ஸ்பூஃப் சீரிஸின் மூன்றாம் பாகமான 'தமிழ்ப் படம் 3' திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது.

பரிணாமம் அடைந்த சிவா!

கடந்த 2010 மற்றும் 2018-ல் வெளியான முதல் இரண்டு பாகங்களிலும் நடிகர் மிர்ச்சி சிவாவுக்கு 'அகில உலக சூப்பர்ஸ்டார்' என்ற பட்டம் வழங்கப்பட்டிருந்தது.

ஆனால், தற்போது வெளியாகியுள்ள மூன்றாம் பாகத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், அவர் 'இன்டர்கேலக்டிக் சூப்பர்ஸ்டார்' எனப் பிரம்மாண்டமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளார்.

இந்த முறை ஏலியன்களுடன் மோதல்

வெளியாகியுள்ள ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், நடிகர் சிவா கோட்-சூட் அணிந்து மாஸாக நின்று கொண்டிருக்க, அவருக்கு நேர் எதிரே ஒரு பிரம்மாண்ட ஏலியன் விண்கலம் இருப்பது போல் காட்டப்பட்டுள்ளது.

இதன் மூலம், தமிழ் சினிமாவின் கமர்சியல் படங்களை மட்டும் வாரிச் சுருட்டாமல், இந்த முறை ஹாலிவுட் ஏலியன் மற்றும் அறிவியல் புனைகதைத் திரைப்படங்களையும் சி.எஸ். அமுதன் செம்மையாகக் கலாய்க்கவிருக்கிறார் என்பது போஸ்டரின் மூலம் தெளிவாகத் தெரிகிறது.

மீண்டும் இணையும் மெகா கூட்டணி

முந்தைய இரண்டு பாகங்களைத் தயாரித்த முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஒய் நாட் ஸ்டுடியோஸ் , இம்முறை ஏபி இன்டர்நேஷனல் நிறுவனத்துடன் இணைந்து இப்படத்தைப் பிரம்மாண்டமாகத் தயாரிக்கிறது.

எஸ். சஷிகாந்த் மற்றும் சக்ரவர்த்தி ராமச்சந்திரா ஆகியோர் இப்படத்தை இணைந்து தயாரிக்கின்றனர். படத்தின் மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய முழு விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படவுள்ளன.

முந்தைய படங்கள்

இயக்குநர் சி.எஸ். அமுதன் கடைசியாக விஜய் ஆண்டனி நடிப்பில் 'ரத்தம்' திரைப்படத்தை இயக்கியிருந்தார். மிர்ச்சி சிவா கடந்த 2025-ஆம் ஆண்டில், நீண்ட நாட்களாகக் காத்திருந்த 'சுமோ' மற்றும் இயக்குநர் ராமின் 'பறந்து போ' ஆகிய இரண்டு திரைப்படங்களில் நடித்திருந்தார்.

இதில் 'பறந்து போ' திரைப்படம் விமர்சகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதுடன், 'சுமோ' படத்திற்கு சிவா திரைக்கதை மற்றும் வசனமும் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

8 வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் வந்துள்ள இந்த காம்போ, தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மற்றுமொரு தரமான நகைச்சுவை விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

X