ஒரு பெண் வெற்றிபெற பத்து மடங்கு போராட வேண்டும் - நடிகர் சூர்யா உருக்கம்

முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்துள்ள படம் விருமன்.விருமன் திரைப்படம் ஆகஸ்ட் 12-ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
சூர்யா
சூர்யா
Published on

இயக்குனர் முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான படம் 'விருமன்'. இப்படத்தை நடிகர் சூர்யா தனது 2டி நிறுவனம் மூலம் தயாரித்திருந்தார். இதில் கார்த்திக்கு ஜோடியாக இயக்குனர் சங்கரின் மகள் அதிதி சங்கர் நடித்திருந்தார். மேலும், இப்படத்தில் பிரகாஷ் ராஜ், ராஜ் கிரண், சூரி, கருணாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

விருமன்

யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருந்த இப்படம் ஆகஸ்ட் 12-ஆம் தேதி வெளியாகி விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் விருமன் படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் நிகழ்ச்சி ஒன்றை படக்குழு ஏற்பாடு செய்திருந்தது.

இந்த நிகழ்ச்சியில் சூர்யா, கார்த்தி, அதிதி சங்கர் மற்றும் படக்குழு பலரும் அவர்களுடைய குடும்பத்துடன் கலந்துக் கொண்டனர். இதில் நடிகர் சூர்யா பேசியதாவது, "எங்களுக்கு பின்னாடி இருக்கும் மிகப்பெரிய பலம் எங்கள் வீட்டு பெண்கள் தான். அவர்களின் தியாகம் மிகப்பெரியது. ஒரு ஆண் இங்கே வெற்றி பெறுவது எளிது. ஆனால், ஒரு பெண் வெற்றிபெற பத்து மடங்கு போராட வேண்டியிருக்கிறது.

கார்த்தி - சூர்யா

வீட்டிலிருக்கும் ஆண் மகனை முன்னிறுத்தி அவர்கள் பின்னால் இருக்கிறார்கள். என் தங்கச்சி சொன்னது தான் எனக்கு இப்போது நியாபகம் வருகிறது. 'எங்களுக்கு சொர்க்கம் எதுன்னா, நாங்க சாப்பிட்ட தட்ட இன்னொருத்தங்க கழுவுறது தான்' என்று சொன்னார்கள். பெண்களை ஒவ்வொரு முறையும் முன்னிறுத்தி அவர்களை புரிந்துகொள்ள வேண்டும்'' என்று பேசினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com