செப்டம்பர் 1-ந்தேதி நடைபெற இருந்த தமிழ் சினிமா வேலை நிறுத்தம் ஒத்திவைப்பு - தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவிப்பு!

சட்டசபை கூட்டத்தொடர் முடிந்ததும் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்படும் - அமைச்சர் ராஜ்மோகன் உறுதியளித்துள்ளார்.
Tamil Film Producers Council
Published on
Summary

திரையரங்குகளில் வெளியிடும் திரைப்படங்களை 8 வாரங்கள் கழித்து மட்டுமே ஓடிடியில் வெளியிட வேண்டும் என விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் அறிவித்தது.

வேலை நிறுத்தம்

தயாரிப்பாளர்களுடன் கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக முடிவு எடுத்துள்ளதாக கூறி தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் வருகிற 1-ந்தேதி முதல் புதிய தமிழ் திரைப்படங்களை வெளியிடமாட்டோம் எனவும் புதிய படப்பிடிப்புகள் நடைபெறாது என வேலை நிறுத்தத்தை அறிவித்தது.

தயாரிப்பாளர்கள் சங்கத்தின் அறிவிப்பு திரை உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.

முன்னணி கதாநாயகர்கள் நடித்துள்ள பெரிய பட்ஜெட் படங்கள், சிறு பட்ஜெட் படங்களும் வெளியாக இருந்த நிலையில் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் வேலை நிறுத்தம் திரை உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

வேலை நிறுத்தத்தை கைவிட வேண்டும் என அரசு மற்றும் பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கைகள் எழுந்த நிலையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் இன்று வேலை நிறுத்தத்தை ஒத்தி வைப்பதாக அறிவித்து உள்ளது.

தயாரிப்பாளர்கள் மனு

இதுகுறித்து தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் விடுக்கப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தமிழ்த் திரைப்படத்துறையில் தற்போது நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு கவனத்திற்கு கொண்டு சேர்க்கும் வகையில், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், மற்றும் தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் ஆகியோர் இணைந்து கடந்த 26-ந்தேதி அன்று சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் ராஜ்மோகனை சந்தித்து திரைத்துறையில் உள்ள பிரச்சினைகளை எடுத்துரைத்து மனுவாக அளித்துள்ளோம்.

அமைச்சர் ராஜ்மோகன் அறிவுறுத்தல்

அந்த மனுவினை பரிசீலித்த அமைச்சர் ராஜ்மோகன் சம்பந்தப்பட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்திற்கும் தற்போது தமிழ்நாட்டில் திரைப்பட வெளியீட்டில் என்ன நடைமுறை உள்ளதோ அதனை தொடர்ந்து பின்பற்றுங்கள்.

சட்டசபை கூட்டத் தொடர் முடிந்தவுடன் முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள், ஆகியோரை தமிழ்நாடு அரசு அழைத்து மேற்படி பிரச்சினைக்கு தீர்வு காணும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்களையும் தற்போது வேலை நிறுத்தம் என்பது வேண்டாம் என்றும் அறிவுறுத்தினார்.

வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு

மேற்படி பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகாண முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் கவனத்திற்கு கொண்டு சென்று, முதல்-அமைச்சரின் வழிகாட்டுதலோடு முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெறும் என்று உறுதியாக தெரிவித்ததின் அடிப்படையில், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் இணைந்து செப்டம்பர் 1-முதல் அறிவித்த புதிய திரைப்படங்கள் வெளியீடு, படப்பிடிப்பு பணிகள், போஸ்ட் புரொடக்‌ஷன் போன்ற வேலை நிறுத்தம் தற்போது ஒத்திவைக்கப்படுகிறது என்றும் கூறப்பட்டுள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com