

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவான 'துணிவு' திரைப்படம் கடந்த 11-ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஏகே62-வது படத்தில் அஜித் இணைய உள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
ஏகே62 படக்குழு
ஏகே 62 படத்தில் நடிகர்கள் அரவிந்த சாமி மற்றும் சந்தானம் நடிக்கவுள்ளதாகவும் இதன் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கப்படவுள்ளதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில், ஏகே62 படத்திலிருந்து இயக்குனர் விக்னேஷ் சிவன் விலகியுள்ளதாக செய்தி வெளியாகி சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.
மகிழ்திருமேனி - அஜித்
அதாவது, தயாரிப்பு நிறுவனத்திற்கு விக்னேஷ் சிவன் கதை பிடிக்காததால் அவர் இந்த படத்தில் இருந்து விலகியுள்ளதாகவும் விக்னேஷ் சிவனுக்கு பதிலாக 'தடம்', 'மீகாமன்', 'கலகத்தலைவன்' போன்ற படங்களை இயக்கிய மகிழ்திருமேனி இந்த படத்தை இயக்கவுள்ளதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் 'ஜஸ்டிஸ் ஃபார் விக்னேஷ் சிவன்' (#JusticeforVigneshShivan) என்ற ஹேஷ்டேக்கும் ட்ரெண்டாகி வருகிறது. ஆனால், இந்த தகவல் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.