"தலைவர் இப்போது என் நண்பர்!" - நடிகை ராஷி கன்னா நெகிழ்ச்சிப் பதிவு!

ரஜினிகாந்த் தனது திரைப்பயணத்திலேயே முதன்முறையாக மருத்துவர் கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.
Rajinikanth - RaashiiKhanna
Published on: 
Summary

தென்னிந்திய சினிமாவின் முன்னணி கதாநாயகியான ராஷி கன்னா, சமூக வலைதளங்கள் வாயிலாகத் தனது ரசிகர்களுடன் கலந்துரையாடுவதை வழக்கமாகக் கொண்டவர்.

அந்த வகையில், சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் 'தர்மன்' திரைப்படத்தில் பணியாற்றிய தனது மறக்க முடியாத அனுபவங்களை நெகிழ்ச்சியோடு பகிர்ந்துள்ளார்.

ரசிகரின் கேள்வியும் ராஷி கன்னாவின் பதிலும்

இன்ஸ்டாகிராம் கலந்துரையாடலின் போது ரசிகர் ஒருவர், "தலைவருடன் வேலை பார்த்தது எப்படி இருந்தது?" என்று கேள்வி எழுப்பினார்.

அதற்குப் பதிலளித்த ராஷி கன்னா, "ரஜினிகாந்துடன் பணியாற்றியது மிகவும் அற்புதமாக இருந்தது. தற்போது அவர் எனது நல்ல நண்பராகிவிட்டார். படப்பிடிப்பு தளத்தில் நான் அவரிடம் தொடர்ந்து பல கேள்விகளைக் கேட்டாலும், அவர் சிறிதும் சலிப்பின்றி புன்னகையுடன் பொறுமையாகப் பதிலளிப்பார்.

அவரிடம் நகைச்சுவை உணர்வும் அதிகம். அவ்வப்போது என்னைக் கேலி செய்து சிரிப்பூட்டுவார். எனக்குப் பிடித்த இணை நடிகர்களில் ரஜினிகாந்தும் ஒருவர். அவரை மிக அருகில் இருந்து கவனிப்பதன் மூலம் ஒரு நடிகையாகப் பல விஷயங்களை நாம் கற்றுக் கொள்ள முடியும்" என்று மனமாறப் பாராட்டியுள்ளார்.

'தர்மன்' படப்பிடிப்பு

இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் 'தர்மன்' திரைப்படத்தில் ராஷி கன்னா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். உலகநாயகன் கமல்ஹாசனின் 'ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல்' நிறுவனம் இத்திரைப்படத்தைப் பிரமாண்டமாகத் தயாரித்து வருகிறது.

ரஜினிகாந்த் தனது திரைப்பயணத்திலேயே முதன்முறையாக மருத்துவர் கதாபாத்திரத்தில் நடிப்பதாகக் கூறப்படும் இத்திரைப்படத்தில் சிம்ரன், யோகி பாபு, ராஷி கன்னா மற்றும் ருக்மிணி வசந்த் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது

X

Maalai Malar
www.maalaimalar.com