

சுந்தர்.சி கூறியதாவது, தயாரிப்பாளர் மற்றும் டைரக்டர் உறவு புருஷன்-பொண்டாட்டி மாதிரி இருக்க வேண்டும். திட்டமிடல் மற்றும் ஒரே செட்யூலில் படப்பிடிப்பு முடிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். தியாகராஜா டாக்கீஸ் நிறுவனம் தொடங்கியதற்கு மகிழ்ச்சி தெரிவித்தார்.
தியாக குறிஞ்சி செல்வன் டாக்டர் ஆர்.விஜயலட்சுமி இணைந்து தியாகராஜா டாக்கீஸ் என்ற புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி உள்ளனர். நிறுவனத்தின் தொடக்க விழா சென்னையில் நடந்தது. விழாவில் ஏ.சி.சண்முகம், ஐசரி கணேஷ், கராத்தே தியாகராஜன், சூரி, சுந்தர்.சி, பாடகி மாலதி, டைரக்டர் சித்ராலட்சுமணன், மிஸ்கின், வெங்கட்பிரபு உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில் டைரக்டர் சுந்தர்.சி பேசியதாவது:-
தயாரிப்பாளரும், டைரக்டரும் புருஷன், பொண்டாட்டி மாதிரி. முதலில் படம் ஆரம்பிக்கும் போது தயாரிப்பாளர் ஸ்டிரிக்டாக பேசிவிட வேண்டும். டைரக்டர் என்னதான் நமக்கு நண்பராக இருந்தாலும் சினிமாவை பொருத்தவரை திட்டமிடல் அவசியம்.
திட்டமிட்டு படப்பிடிப்பை தொடங்கி ஒரே செட்யூலில் முடிக்க பார்க்க வேண்டும். தயாரிப்பாளர்- டைரக்டர் நல்ல உறவு ரொம்ப முக்கியம். மிகப்பெரிய நண்பர்கள் வட்டத்தில் குறிஞ்சி செல்வன் தனி சிறப்பு வாய்ந்தவர். அவர் புதிய தயாரிப்பு நிறுவனம் தொடங்கி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
தியாகராஜா டாக்கீஸ் தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படம் ஜெய் நடிப்பில் உருவாகிறது. படத்தை சிவபிரசன்னா இயக்குகிறார். இதற்கான அறிவிப்பும் விழாவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.