

சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மூக்குத்தி அம்மன்-2’ படம் பக்தி கலந்த பொழுதுபோக்கு நிறைந்ததாக உருவாகியுள்ளது. 99 சதவீதம் சி.ஜி. காட்சிகள் கொண்ட இப்படத்தில் ஏ.ஐ. தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது என அவர் கூறினார்.
சுந்தர்.சி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவாகி உள்ள படம் ‘மூக்குத்தி அம்மன்-2’. இப்படத்தில் ஊர்வசி, ரெஜினாகசாண்ட்ரா, துனியா விஜய் உள்பட பலர் நடித்துள்ளனர். ஹிப்ஹாப் தமிழா இசை அமைத்துள்ளார். நாளை திரைக்கு வர இருக்கும் இந்த படத்தை வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார். குஷ்பு சுந்தர், விக்னேஷ் சிவன், இணைந்து தயாரித்துள்ளனர். இதையொட்டி இயக்குனர் சுந்தர்.சி அளித்த பேட்டியில் கூறியதாவது:-
‘மூக்குத்தி அம்மன்-2’ படம் முழுக்க முழுக்க பக்தி படம் கிடையாது. இது பக்தி கலந்த பொழுதுபோக்கு நிறைந்த படம். வழக்கமாக அம்மன் படங்களில் ஊரையோ, குடும்பத்தையோ, குழந்தையையோ காப்பாற்றுவதற்காக அம்மன் வருவதை பார்த்திருப்போம். ஆனால் இந்த படத்தில் அம்மன் தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்ள வேண்டிய சூழ்நிலையில் வருவது போல்தான் இந்த படம். 2000 வருடத்திற்கு முன்பு நடந்த சம்பவங்களும் இப்போது நடக்கும் சம்பவங்களும் நேர்கோட்டிற்கு வருவதுதான் இந்த கதை.
நான் தீவிர முருக பக்தர். ஒவ்வொரு படம் திரைக்கு வரும் போதும் வடபழனி அல்லது பழனி முருகன் கோவிலுக்கு போவேன். மணிவண்ணன் நாத்திகர் கிடையாது. அவருடன் 2 வருடம் நான் இருமுடி கட்டி சபரிமலை சென்றுள்ளோம். எனவே அவர் நாத்திகர் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. என்னுடைய குலதெய்வம் பாஞ்சாலி திரவுபதி அம்மன் கோவில். ஆண்டுதோறும் செல்வேன். 6 மணி காட்சிக்கு அரசு அனுமதியை கொடுத்ததற்கு நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். சினிமா சார்ந்த நிறைய பிரச்சனைகள் இன்னும் இருக்கிறது. அதையும் இந்த அரசு தீர்த்து வைக்கும் என நம்புகிறேன்.
முதலமைச்சர் விஜய்யை வைத்து படம் இயக்குவதற்காக நிறைய தடவை பேசினோம். என்ன பிரச்சனை என்றால் எனக்கு கதை சொல்ல வராது. அவர் முழுக்கதையையும் கேட்டு நடிப்பார். இரண்டும் ‘செட்’ ஆகவில்லை. என்னுடைய நிறைய வெற்றிப்படங்கள் அவருடன் நான் பேச்சுவார்த்தை நடத்திய படங்கள்தான். எதிர்காலத்தில் ஏ.ஐ. தொழில்நுட்பத்தை தவிர்க்க முடியாது. ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தில் 99 சதவீதம் சி.ஜி. காட்சிகள் உள்ளன. அதில் 15 காட்சிகளில் ஏ.ஐ. பயன்படுத்தப்பட்டுள்ளன. இன்னும் 2 வருடத்தில் ஏ.ஐ. எந்தளவுக்கு போட்டியாக இருக்கும் என சொல்லவே முடியாது. நடிப்பதை விட எனக்கு டைரக்ஷன் தான் பிடிக்கும். பொங்கல் பண்டிகையில் என்னுடைய இயக்கத்தில் உருவாகி உள்ள புருஷன் படம் திரைக்கு வர இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.