'ராமாயணா' பட பாடலில் சூஃபி இசை.. விமர்சனங்களுக்கு ஏ.ஆர். ரகுமான் நறுக் பதில்

இதிகாச கதையில் சூஃபி இசையை இடம்பெற செய்தது முறையல்ல
 ஏ.ஆர். ரகுமான்
Published on: 
Summary

ராமாயணா படத்தில் இடம்பெற்ற மங்கள் ரங் பாடல் சர்ச்சைக்கு ஏர் ரகுமான் பதிலளித்துள்ளார்.

நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யாஷ் நடிப்பில் உருவாகி உள்ள படம் ‘ராமாயணா’.

அதிக பொருட்செலவில் பிரமாண்டமாக உருவாகி உள்ள இந்த படம் தீபாவளி பண்டிகையையொட்டி வருகிற 6-ந்தேதி உலகமெங்கும் திரைக்கு வருகிறது.

இசை

ஏஆர் ரகுமான், உலக இசை ஜாம்பவான் ஹான்ஸ் ஜிம்மருடன் இணைந்து இப்படத்தின் இசையை மேற்கொண்டுள்ளார்.

அமேசான் மியூசிக் சார்பில் கடந்த அக்டோபர் 22 அன்று ‘ராமாயணா’ திரைப்படத்தின் பிரமாண்ட இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றாக வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று ராமாயணா படத்தின் 'மங்கள் ரங்' பாடல் வெளியானது.

இராமாயணத்தில் சூஃபி இசை

ஏஆர் ரகுமான் இசையமைத்த இப்படத்தின் பாடலை அர்ஜித் சிங் மற்றும் ஷ்ரேயா கோஷல் இணைந்து பாடியுள்ளனர். இப்பாடல் ராமர் மற்றும் சீதனையின் தெய்வீக பிணைப்பையும் அவர்களின் ஒருமித்த பயணத்தையும் குறிக்கும் வகையில் அமைந்துள்ளது.

இந்நிலையில் இந்த பாடலின் ஒரு பகுதியில் ரகுமான், சூஃபி (Sufi) இசையில் உள்ள க்குவாலி (qawwali) என்ற இசையை பயன்படுத்தி உள்ளது விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது.

விமர்சனம்

இந்து இதிகாச கதையில் சூஃபி இசையை இடம்பெற செய்தது முறையல்ல என சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

வணிக நோக்கத்திற்காக வரலாற்றின் தவறான சித்தரிப்பு சரியல்ல என்றும் கூறப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஏ.ஆர் ரகுமானிடம் சமூக வலைத்தளத்தில் பலரும் தங்கள் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர்.

சூஃபி இசை என்பது இஸ்லாமிய மரபில் வரும் சூஃபி மெய்யியல் தத்துவத்தை அடிப்படையாக கொண்ட ஒரு இசை வடிவம் ஆகும்.

ஏஆர் ரகுமான் பதில்

இந்நிலையில் சமூக ஊடகங்களில் வரும் கருத்துக்களை விட, தனது படைப்பில் வெளிப்படும் நேர்மைக்கே அதிக முக்கியத்துவம் கொடுப்பதாக ஏஆர் ரகுமான் தெரிவித்துள்ளார்.

தேசிய ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்த ரகுமான், "ஒரு பாடலைத் தயாரிப்பதில் நாங்கள் மிகுந்த முயற்சி எடுக்கிறோம். பலவற்றை சேர்க்கிறோம் மாற்றுகிறோம். பல யோசனைகளுக்கு பிறகே அதை இறுதி செய்கிறோம்.

இந்த செயல்முறை முடிந்ததும், வரும் கருத்துக்களைப் பார்க்கக்கூட எங்களுக்கு பொறுமை இருப்பதில்லை.

சில சமயங்களில் என் மகன் வந்து, 'நேற்று அவர் இதைச் சொன்னார்' என்று சொல்வான்.

நான் என் வேலையை நேர்மையாக முடித்துள்ளேன், பார்வையாளர்கள் அதைப் பாராட்டுவார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்," என்றார்.

தனது மூன்று தசாப்த கால திரைப்பயணத்தில், ராமாயணம் போன்ற ஒரு சிறந்த கதைக்கு பல மொழிகளில் இசையமைப்பது ஒரு கௌரவமாகவும் பொறுப்பாகவும் உணர்வதாக ரகுமான் ஏற்கனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com