

தமிழ் திரையுலகில் பல தசாப்தங்களாகத் தரமான திரைப்படங்களை வழங்கி வரும் முன்னணி தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி ஃபிலிம்ஸ், தங்களின் அடுத்த பிரம்மாண்ட படைப்பை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கும் அவரது 27-வது திரைப்படத்தின் (SK27) அதிகாரப்பூர்வ அறிவிப்பு போஸ்டர் வெளியாகி, இன்று முதல் படப்பிடிப்புப் பணிகள் விறுவிறுப்பாகத் தொடங்கியுள்ளன.
டி.ஜி. தியாகராஜன் வழங்கும் இப்படத்தைச் செந்தில் தியாகராஜன், அர்ஜுன் தியாகராஜன் மற்றும் சாய் சித்தார்த் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.
'பார்க்கிங்' திரைப்படத்தின் மூலம் எளிமையான கதையை விறுவிறுப்பான திரைக்கதையாக்கி ரசிகர்களின் கவனம் ஈர்த்த இயக்குநர் ராம் குமார் பாலகிருஷ்ணன் இப்படத்தை எழுதி இயக்குகிறார்.
சிவகார்த்திகேயன் - ராம் குமார் இணையும் முதல் படம் இதுவாகும். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கயாடு லோகர் நடிக்கிறார். இந்த புதிய ஜோடி திரையில் தோன்றுவது இதுவே முதன்முறை. 'பரிதாபங்கள்' புகழ் சுதாகர் மற்றும் மூத்த நடிகர் ஜார்ஜ் மரியான் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
படக்குழு வெளியிட்டுள்ள அறிவிப்பு போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. போஸ்டரின் மையத்தில் ஒரு சிவப்பு நிற கார் இடம்பெற, அதைச் சுற்றிலும் ஏராளமான மக்கள் சூழ்ந்து ஓடி வருவது போலப் பிரம்மாண்டமாக அது வடிவமைக்கப்பட்டுள்ளது.
சிவப்பு, பச்சை மற்றும் கருப்பு நிறங்களின் கலவையில், புகை மற்றும் ஒளி அமைப்புடன் பரபரப்பாகக் காட்சியளிக்கும் இந்த போஸ்டர், படம் ஒரு தீவிரமான ஆக்ஷன் அல்லது திரில்லர் பின்னணியைக் கொண்டிருக்குமோ என்ற பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இப்படத்தின் பின்னணியில் தமிழ் சினிமாவின் முன்னணி தொழில்நுட்பக் கலைஞர்கள் கைகோர்த்துள்ளனர்.
ஒளிப்பதிவுவை ஓம் பிரகாஷ், படத்தொகுப்பிற்கு கலைவாணன், கலை இயக்கம் ராஜேஷ், ஆடை வடிவமைப்பு பிரவீன், சண்டைப் பயிற்சி ஸ்டீவன் குமார் ஆகியோர் இணைந்து பணிபுரிந்துள்ளார்.
சத்யஜோதி ஃபிலிம்ஸ் மற்றும் சிவகார்த்திகேயன் கூட்டணியில், 'பார்க்கிங்' இயக்குநரின் கைவண்ணத்தில் உருவாகும் 'SK27' படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் மற்றும் தலைப்பு குறித்த விபரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.